Sunday, May 19
Shadow

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – திரைவிமர்சனம் Rank 3.5/5

 

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்பட விமர்சனம்!

மிர்ச்சி சிவா படத்தை பொறுத்தவரையில் லாஜிக் எதுவும் பார்க்காமல் தியேட்டருக்கு போனால் மினிமம் கேரண்டி சிரிப்பு நிச்சயம் . அதே பாணியில் வெளியாகியுள்ள திரைப்படம் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும். இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார்.

இப்படம் பேன்டசி வகையை சேர்ந்தது. மிர்ச்சி சிவா இஞ்சினியரிங் முடித்துவிட்டு உணவு டெலிவரி செய்யும் வேலையை பார்த்து வருகிறார். இவரது அப்பா மனோ, நண்பர் மாகாபா. சிவா அஞ்சு குரியனை காதலிக்கிறார். இந்த நிலையில் சிங்கிளாக சுத்தும் பசங்களுக்காக ஷா ஒரு செல்போனை கண்டுபிடிக்கிறார். ஆர்டிபிஸியல் இன்டலிஜன்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஏ.ஐ. சிம்ரனாக மேகா ஆகாஷ். ஒருநாள்‌அந்த செல்போன் சிவாவின் கைக்கு வருகிறது. அது சிவா நினைத்தது எல்லாம் செய்துகொடுக்கிறது. எல்லாம் கிடைக்கிறது. காதலும் செட்டாகிறது. இதனால் செல்போனை தவிர்க்க தொடங்குகிறார் சிவா. இதனால் கோபமடைந்த செல்போன் சிம்ரன் சிவாவை பழிவாங்குவதற்காக பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இறுதியில் எல்லா குழப்பங்களும் தீர்ந்ததா என்பதே கதை.

சிவா படம் என்றாலே லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். இந்தப் படமும் ரசிக்கும் வகையில் உள்ளது. அங்கங்கே சிவாவின்‌ வழக்கமான வசனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. ஆனால் மற்றவர்கள் செய்யும் காமெடி கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. மேகா ஆகாஷ் ஆர்டிபிஷியல் இன்டலிஜன்டாக இருந்தாலும் நமக்கு இப்படி ஒரு காதலி கிடைக்கமாட்டாளா என்று ஏங்க வைக்கிறார். எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோ போல் காதல் உணர்ச்சியுள்ள இயந்திரமாக அனுதாபத்தை அள்ளுகிறார். சின்ன சின்ன முகபாவனைகள் அழகாக உள்ளது. மாகாபா மற்றும் திவ்யா கணேஷ் கணவன் மனைவியாக வருகின்றனர். சிவாவின்‌ நண்பர்கள். அவர்களது நடிப்பும் ஓகே. நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடகர் மனோ. திரையில் தனக்கான வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. லாஜிக் தேவையில்லை என்றாலும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மேஜிக் செய்திருக்கலாம். கிளைமாக்ஸ் இப்படித்தான் முடியும் என்று யூகிக்க முடிகிறது. ஒருமுறை பார்க்கலாம்.