Tuesday, May 14
Shadow

சிறுவன் சாமுவேல் – திரைவிமர்சனம்

சிறுவன் சாமுவேல் திரைவிமர்சனம்


தமிழ் சினிமாவில் அத்தி பூத்தது போல் மிகச் சிறந்த உணர்வுபூர்வமான கதைகள் வெளிவரும் அப்படியான ஒரு கதை தான் சிறுவன் சாமுவேல்.

முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு குறிப்பாக இரண்டு கதாபாத்திரங்கள் இரண்டு சிறுவர்கள் அந்த சிறுவர்கள் வைத்து தான் கதைக்களம் இரண்டு சிறுவர்களின் நட்பையும் உணர்வுகளையும் வைத்து தான் இந்த படத்தின் கதை பின்புலத்தை அமைத்துள்ளார் இயக்குனர் இதற்கு கிரிக்கெட் என்ற ஒரு விளையாட்டை மையமாக வைத்து மிகவும் உணர்வுபூர்வமாக கொடுத்துள்ளார் இயக்குனர் நிச்சயமாக அதற்காக அவரை பாராட்ட வேண்டும் படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருவரும் பொது முகங்களை தெரிந்த முகம் என்று சொல்லும் படி ஒருவரு கூட இல்லை அதேபோல நாகர்கோவில் வட்டார வழக்கில் இந்த படத்தை எடுத்துள்ளார்
பேசும் வசனங்களும் நாகர்கோவில் வட்டார. வழியிலே எடுத்துள்ளார்.
குழந்தைகளுக்கான படம் என்றால் பெரியவர்கள் குழந்தைகளை எப்படி பார்க்கிறார்கள் என்பதை தவிர்த்து குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கிறது என்று அவர்களின் உலகத்திற்கே சென்று பார்க்கும் வித்தைதான் அது.

அந்த வகையில் சாமுவேல் என்ற சிறுவனின் ஒரு காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட படம் இது. நல்லது எது, கெட்டது எது என்று இனம் புரியாத பதின் பருவ தொடக்கத்தில் இருக்கும் சாமுவேல் என்ற சிறுவன் தன் மனசாட்சியை முதன் முதலாகக் கண்டெடுக்கும் நிகழ்வுதான் இந்தப் படத்தின் கரு.
சாமுவேலாக நடித்திருக்கும் அஜிதன் தவசிமுத்து மற்றும் ராஜேஷாக நடித்திருக்கும் கே.ஜி.விஷ்ணு உள்ளிட்ட அனைத்து சிறுவர்களுமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

கே.ஜி.விஷ்ணுவின் பார்வையே ஒரு தினுசாக இருக்கிறது. அதுவே அவனை கள்வனாகவும் நம்ப வைக்கிறது.

எல்லோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் என்பதை விட கேமராவுக்கு முன்னால் அவர்கள் பாட்டுக்கு வாழ்ந்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரி பகுதியில் நடக்கும் கதை என்பதால் அங்கிருக்கும் சிறுவர்களையே தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததில் சுத்தமான குமரித் தமிழைப் படம் முழுதும் கேட்க நேர்கிறது. அதுவே படத்தின் ஒரு சுவாரசியத்துக்கும் காரணமாக அமைகிறது.

உங்கள் முன்னால் கேமரா ஓடிக் கொண்டிருக்கிறது என்ற நினைவில்லாமல் நீங்கள் பாட்டுக்கு நடித்துக் கொண்டிருங்கள் என்று இயக்குனர் சொல்லி இருப்பார் போல. குமரி மாவட்டத்து வழக்கும், வாழ்க்கையும் அப்படியே நம் கண் முன்னால் விரிகிறது.

படத்தில் நடிப்பதற்கு நடிக, நடிகையரைப் பிடிக்க வேண்டும் என்றால் அந்த ஏரியாவில் அழகான முகங்களைத்தான் பிடிப்பார்கள். ஆனால், படத்தில் தான் படைத்த பாத்திரங்கள் எந்த வகையினரோ அப்படியே அத்தனைப் பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனரின் தேவை புரிந்து ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்தியும், இசையமைப்பாளர்கள் சாம் எட்வின் மனோகர் மற்றும் ஸ்டான்லி ஜானும் அவரது எண்ண அலைவரிசையிலேயே பயணப்பட்டு இருக்கிறார்கள்

சாமுவேலின் மனசாட்சி திறக்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் அவன் ஓடிவரும் வழிகள் எல்லாம் ஏதோ ஒரு விசேஷத்தின் காரணமாக சீரியல் லைட் செட்கள் வண்ணமயமாக எரிந்து கொண்டிருப்பதில் காட்சியின் தேவையை ஒளிப்பதிவாளர் மிகத் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார்.

இயல்பாக வரும் மழை சாமுவேலின் குற்றத்தை கழுவி அவன் பின்னணியில் எரியும் வண்ண விளக்குகள் அவன் மன இருள் அகன்று ஒளிர்வதாக உணர வைக்கும் அந்த இறுதிக் காட்சி இயக்குனரின் திறமைக்கு சான்று.

இப்போது பல பட விழாக்களில் கலந்து கொண்டிருக்கும் இந்தப் படம் பரிசுகளை வென்றிருக்கிறது. மேலும் பல பட விழாக்களில் உயரிய பரிசுகளைப் பெறும் சாத்தியமும் இந்தப் படத்துக்கு இருக்கிறது.

 

நிச்சயம் இந்த சிறுவர்கள் மற்றும் இயக்குனருக்கு தேசிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.