Saturday, October 11
Shadow

பதற்றமான தென் தமிழகம் – இளைஞர்களின் கதையாக “பைசன்”

பதற்றமான தென் தமிழகம் – இளைஞர்களின் கதையாக “பைசன்”

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடித்திருக்கும் “பைசன்” திரைப்படம் அக்்டோபர் 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்தைப் பற்றி இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்ததாவது:

“பைசன் என் கரியரில் மிக முக்கியமான படம்.
மிகவும் கனமான, சிக்கலான கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்லும் முயற்சியில் எனக்கு ஒரு புதிய பக்குவம் கிடைத்தது. இந்த படத்தை மக்கள் பார்க்கும் போது ஒரு மாற்றம் நிகழும் என்று நான் நம்புகிறேன்.

இதில் கபடி வீரர் மணத்தி கணேசனின் கதையும், என் வாழ்க்கையின் சில பகுதிகளும், பதற்றத்தில் வாழும் தென் தமிழக இளைஞர்களின் அனுபவங்களும் அடங்கியுள்ளன.

இந்தப் படத்திற்காக தன்னையே முழுமையாக என்னிடம் ஒப்படைத்த துருவ் விக்ரத்துக்கும், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் அண்ணனுக்கும், நடித்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தக் கதையை எளிதாக, சாதாரண சினிமா போல் உருவாக்க முடியாது. ஒருவருடம் தொடர்ந்து பயிற்சி செய்து, முழுமையான கபடி வீரராகவும், தென் தமிழக கிராமத்து இளைஞனாகவும் துருவ் விக்ரம் மாற வேண்டியிருந்தது. அதற்கு கடுமையான உடல் உழைப்பும் தேவைப்பட்டது. படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே துருவ்க்கு சிரமமாக இருந்தது. அவனிடம் வேறு கதை செய்யலாமா என்று கேட்டேன்.

அதற்கு அவன், “இல்லை, கஷ்டமா தான் இருக்கு… ஆனா உங்களுக்கு இந்த படம் கனவுப்படம் என்பதை நான் அறிவேன். உங்களை அப்பா மாதிரி நினைச்சுக்கிட்டு வரேன். நீங்க என்னைப் பார்த்துக்குவீங்கன்னு நம்புறேன்” என்று சொன்னான். அந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த வலிமையைக் கொடுத்தன.

அதன்பின், அவனை எந்த சிரமமும் பாதிக்காமல் பார்த்துக்கொண்டேன். எனது மற்ற படங்களை விட, இந்தப் படத்திற்காக அதிக உழைப்பு செலவிட்டேன். துருவ் என்னை நம்பியதோடு, அவனது குடும்பமே இந்த படத்துக்கு முழுமையாக நம்பிக்கை வைத்தது.

இரண்டு வருடங்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்து, படப்பிடிப்பிற்காக நிறைய நாட்கள் ஒதுக்கி, முழுமையாக அர்ப்பணித்துள்ளார் துருவ். தமிழ் சினிமாவில் அரிதாகக் காணக்கூடிய அளவு கஷ்டப்பட்டு செய்துள்ளார். படத்தை பார்த்தால் அந்த அசல் தன்மை தெரியும்.

படம் முடிந்தபின் என் நலன்விரும்பிகள் அனைவரும், “நீ நினைத்ததை சாதிச்சிட்டே” என்று கூறினார்கள். “தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கையாக துருவ் விக்ரம் இருப்பார்; அவரின் உண்மையான சினிமா பயணம் இப்போதுதான் தொடங்குகிறது” என்று ஒவ்வொருவரும் தனித்தனியாக சொன்னார்கள்.

அந்த வார்த்தைகளை கேட்கும்போது எனக்கும், துருவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அதை ரசிகர்கள் சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என்றார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

📌 அக்டோபர் 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் “பைசன்”, தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாகக் கருதப்படுகிறது.