
எழுத்தாளர் இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’, ‘நந்தன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநரும் எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நாவலின் வெளியீடு மற்றும் அறிமுக விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் எழுத்தாளர் நக்கீரன் கோபால், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன், ஜூனியர் விகடன் ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, திருமதி கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
‘ஜூனியர் விகடன்’ வார இதழில் ஐம்பது வாரங்களுக்கு மேலாக தொடர்கதையாக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ‘சங்காரம்’ தற்போது நூலாக வெளியிடப்பட்டுள்ளது. டெல்டா பகுதியை மையமாகக் கொண்டு குற்றம், அரசியல், காவல்துறை, காதல், வன்முறை, சமூகச் சிக்கல்கள் ஆகியவற்றை பின்னிப்பிணைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
கவிஞர் வெயில் பேசுகையில், “குற்றத்தின் உளவியல், மனித உணர்வுகள், காதல், வன்முறை, பாலின அரசியல், சாதியச் சிக்கல்கள் ஆகியவை இலக்கியத் தரத்துடன் இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. காமமும் கருணையும், அதிகாரமும் அடக்குமுறையும் ஒரே நேரத்தில் பேசும் படைப்பாக ‘சங்காரம்’ அமைந்துள்ளது” என்றார்.
ஆசிரியர் கலைச்செல்வன், “சரவணன் மனித மனத்தின் இருண்ட பகுதிகளுக்குள் தைரியமாக பயணிக்கும் கதைசொல்லி. அவரது எழுத்தாளர் முகம் இந்த நாவலில் முழுமையாக வெளிப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன், “வன்முறையும் அன்பும் சமமாக பின்னப்பட்ட இந்த நாவல் திரைப்படமாகவோ இணையத் தொடராகவோ உருவானால் பெரும் வெற்றி பெறும்” என்றார்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், “இந்த நாவலில் சினிமாவுக்கே உரிய விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்துள்ளன. ‘சங்காரம்’ திரைப்படமாக உருவானால் எங்கள் நிறுவனம் தயாரிக்கத் தயாராக உள்ளது” என்று அறிவித்தார்.
நடிகர் சூரி, “இந்த நாவலில் உள்ள சூரி – மார்ட்டின் கதாபாத்திரங்களின் காதலும் வன்முறையும் மனதை நெகிழ வைத்தது. சரவணனின் எழுத்து காட்சிகளாக கண்முன் நிற்கிறது” என்றார்.
எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், “பெண்களின் உளவியல், அதிகார அரசியல், குற்ற உலகம் ஆகியவை ஆழமாக பேசப்பட்டுள்ள நாவல் இது. மரிக்கொழுந்து போன்ற கதாபாத்திரங்கள் வாசகர்களை மனதளவில் இணைக்கின்றன” என்று பாராட்டினார்.
நடிகர் சசிகுமார், “இந்த நாவல் முழுக்க ஒரு திரைக்கதை போல நகர்கிறது. ‘சுப்ரமணியபுரம்’ போல ‘சங்காரம்’ படமாக உருவானால் பெரும் வெற்றி பெறும்” என்றார்.
நக்கீரன் கோபால், “டெல்டா பகுதியின் குற்ற வரலாற்றை மையமாகக் கொண்டு வலுவான கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இது தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய படைப்பு” எனக் குறிப்பிட்டார்.
நூலாசிரியர் இரா. சரவணன் பேசுகையில், “கூலிக்கொலைகள் எவ்வளவு சாதாரணமாகி விட்டன என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த நாவலை எழுதினேன். இதில் பெண்கள் தான் கதையின் திசையை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். ‘சங்காரம்’ மனித மனத்தின் வன்முறையும் அன்பும் மோதும் கதை” என்றார்.
‘சங்காரம்’ நாவல் விரைவில் திரைப்படமாகவோ இணையத் தொடராகவோ உருவாகும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த விழா ஏற்படுத்தியது.
