Wednesday, November 5
Shadow

‘தி டிரெய்னர்’ – காவல்துறை செயலியான ‘காவலன்’ ஆப்பில் இருந்து ஈர்க்கப்பட்ட அதிரடி த்ரில்லர் திரைப்படம்.

டிரான்ஸ்இந்தியா மீடியா & எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தி டிரெய்னர்’ – காவல்துறை செயலியான ‘காவலன்’ ஆப்பில் இருந்து ஈர்க்கப்பட்ட அதிரடி த்ரில்லர் திரைப்படம்.

த்ரில்லர் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கம். அதேபோல், விறுவிறுப்பான திரைக்கதையும், திறமையான நடிகர்களின் நடிப்பும் இணைந்து உருவாகியுள்ள இந்த படம், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்இந்தியா மீடியா & எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் பேனரின் கீழ், நீலா தயாரிப்பில், பி. வேல்மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஸ்ரீகாந்த் நாய் பயிற்சியாளராகவும், ஷ்யாம் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். மேலும், இளம் நடிகர் பிரின்ஸ் சால்வின் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு காவல்துறை உருவாக்கிய ‘காவலன்’ செயலியிலிருந்து உத்வேகம் பெற்றுள்ள இந்த திரைப்படம், சமூகப் பொறுப்புடன் உருவாக்கப்பட்டதுடன், அதிரடி மற்றும் உணர்ச்சியையும் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் எம்.ஜி.ஆர் ஒரு அக்குபஞ்சர் மருத்துவராக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் செல்வாக்கில் செயல்படும் குற்றக் கும்பலைச் சுற்றியே கதை நகர்கிறது. வியர்வையின் மூலம் மனிதரை அடையாளம் காணும் தனித்துவமான சக்தியைப் பெற்ற ஸ்ரீகாந்த், ஒரு அனாதை இல்லத்தை கவனித்து வருகிறார். இதே சமயத்தில், ஷ்யாம் தலைமையிலான போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் சிக்கிக் கொள்கிறார். தவறான புரிதலால் அவர் குற்றவாளி என கருதப்படுகிறார். தனது குற்றமற்ற தன்மையை நிரூபிக்கவும், தன் அனாதை இல்லத்தையும் நேசிக்கும் பெண்ணையும் பாதுகாக்கவும் போராடும் ஸ்ரீகாந்தின் பயணமே கதை.

படத்தில் எட்டு அதிரடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீகாந்த், ஷ்யாம் இருவரும் அதிரடி காட்சிகளில் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவை அருள்மொழி சோழன், இசையை கார்த்திக் ராஜா, தொகுப்பை நிரஞ்சன் ஆண்டனி கையாண்டுள்ளனர். தயாரிப்பை பிரபாகரன் சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளார்.

நடிகைகள் அஞ்சனா க்ருத்தி, புஜிதா பொன்னாட இருவரும் கதையின் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே.ஆர்.எம். ராஜ்மோகன், பிரியங்கா ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் சமூகப் பொறுப்பை ஒருங்கே இணைத்த இந்த படம், பார்வையாளர்களுக்கு முழுமையான எண்டர்டெயின்மென்ட் அனுபவத்தை வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதுடன், விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.