Monday, May 20
Shadow

எஸ்.ஜே.சூர்யாவின் முதல் வெப் சீரிஸ் “வதந்தி” விமர்சனம் !

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே‌.சூர்யா நடித்துள்ள முதல் வெப் சீரிஸ் வதந்தி. இதுவும் ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதைதான். வெலோனி என்ற 18 வயது இளம்பெண் கொலை செய்யப்படுகிறார். கொலையாளி யார் என்று எஸ்.ஐ. எஸ்.ஜே.சூர்யா தேடும் படலமே வதந்தி. அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்த இணைய தொடர் 8 எபிசோட் கொண்டது.

இதில் நாசர், லைலா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, ஸ்ருதி வெங்கட், குமரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளனர்.

கன்னியாகுமரியில் கதை நடக்கிறது. தந்தை இல்லாத பள்ளி மாணவியான வெலோனி தனது தாய் லைலாவுடன் வசித்து வருகிறார். ஆங்கிலோ இந்தியனான லைலா அங்குள்ள ஒரு தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். வெலோனி நல்ல அழகான பெண் என்பதால் எப்போதும் பசங்க கூட்டம் அவளை சுற்றிக்கொண்டெ இருக்கும். இதனால் லைலா அவளை மிகவும் கண்டிப்புடன் வளர்த்து வருகிறார். இதனால் வெலோனிக்கும் அவளது அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒரு நாள் அந்த விடுதியில் எழுத்தாளரான நாசர் வந்து சில நாட்கள் தங்குகிறார் அப்போது அவருக்கும் வெலோனிக்கும் ஒரு நட்பு உருவாகிறது. இது ஒருபுறம் இருக்க வெலோனியை குமரனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாய் முடிவெடுக்கிறார். இதில் வெலோனிக்கு விருப்பம் இல்லை. இந்த நிலையில் வெலோனி திடீரென கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. இதனை விசாரிக்கும் போலீஸாக எஸ்.ஜே.சூர்யா வருகிறார். இவர் கொலை செய்தவரை கண்டுபிடித்தாரா? வெலோனியை கொன்றது யார் என்பதே வதந்தி.

பொதுவாக இதுபோன்ற மர்டர் மிஸ்ட்ரி கதைகள் எழுதப்படும் போது ஒரு கொலை அதை செய்தது யார் என்ற கோணத்தில் கதை நகரும். அதற்கு கதையில் ஐந்தாறு கதாபாத்திரங்களை காட்டி இவர்களில் யார் செய்திருப்பார்கள் என்று நம்மை யோசிக்க வைத்து குழப்புவார்கள். நாமும் யார் செய்திருப்பார்கள் என்று மண்டையை பிய்த்துக்கொண்டு இருந்தால் அதுதான் இதுபோன்ற இணைய தொடர்களின் வெற்றி. அதில் வதந்தியும் வெற்றி பெற்றுள்ளது. எட்டு எபிசோடுகளும் பரபரப்பாக சென்று நமக்கு நல்ல ஒரு த்ரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்துள்ளது.

வெலோனியாக சஞ்சனா துறுதுறுவென குறும்பு பெண்ணாக நம் மனதில் பதிகிறார். இயல்பான நடிப்பால் கவர்கிறார். நாசருக்கும் இவருக்குமான காட்சிகளில் அநாயசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரை சுற்றித்தான் மொத்த கதையும் என்பதால் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். நாசருக்கு இந்த கதாபாத்திரம் ஒன்றும் புதிதல்ல. தனது பங்கை நிறைவாக வழங்கியுள்ளார். லைலாவுக்கு அம்மா கதாபாத்திரம் என்றாலும் ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார். வசன உச்சரிப்பும் நன்று. ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதை களத்திற்கு கன்னியாகுமரியை தேர்வு செய்தது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. அங்குள்ள இடங்களும் அவர்களது மொழியும் பார்க்க புதிதாக தெரிகிறது. விசாரணை என்றாலே காவல் நிலையமும் நீதிமன்றமும்தான் புதிய கதைக்களம் என்பதால் நமக்கு சலிப்பு ஏற்படவில்லை.

எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக நடித்துள்ள ஓடிடி தொடர். உதவி காவல் ஆய்வாளராக மிளிர்கிறார். ஆரம்பகட்ட விசாரணையில் ஒவ்வொன்றாக கண்டுபிடிப்பது ஒரு கட்டத்தில் எதுவுமே கிடைக்காமல் நிலைகுலைந்து என அமர்க்களம் செய்துள்ளார். ஆனால் அவரது நடிப்புக்கு இந்த தீனி பத்தாது தலைவரே. அவரது மனைவியாக ஸ்ருதி வெங்கட். காட்சிகள் குறைவு என்றாலும் தனது பங்கை நிறுவியுள்ளார். விவேக் பிரசன்னா எஸ்.ஜே.சூர்யா கூடவே வரும் போலீஸாக வருகிறார் அவரது கன்னியாகுமரி பேச்சும் அருமை.

இதுபோன்ற படங்களுக்கு இசையும் ஒளிப்பதிவும் மிகவும் முக்கியம். சைமன் கே கிங் தனக்கு தெரிந்த மொத்த வித்தையையும் இதில் இறக்கியுள்ளார். பின்னணி இசையில் த்ரில்லர் படங்களுக்கு உண்டான ஹைப் ஏற்றியுள்ளார். மொத்தத்தில் வதந்தி நல்ல பொழுதுபோக்கு தொடர்