Monday, May 20
Shadow

விருமன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

கணவர் முனியாண்டி (பிரகாஷ் ராஜ்) வேலைக்காரியோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை அறிந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் சரண்யா பொன்வண்ணன். அம்மா சாவுக்கு அப்பா தான் காரணம் என அறிந்த நிலையில், சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி குஸ்தி வாத்தியாரான மாமா ராஜ்கிரண் உடன் சேர்ந்து கொள்ளும் விருமன் (கார்த்தி) வளர்ந்து பெரியவனான நிலையிலும் அப்பாவை பழிவாங்க போராடுவதும், கடைசியில் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை கிளைமேக்ஸில் என்ன ஆனது என்பது தான் விருமன் படத்தின் கதை.

தாசில்தாரான முனியாண்டியின் 4வது மகன் தான் விருமன். விருமன் வீட்டை விட்டு வெளியேறினாலும் மற்ற மூன்று அண்ணன்கள் அப்பாவோடு இருக்கின்றனர். அந்த மூன்று பேருக்கும் இருக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக சரி செய்து அவர்களை தன் பக்கம் இழுத்து அப்பாவை பழிவாங்க நினைக்கிறார் விருமன். நக்கல், நையாண்டி, வீரம், மிரட்டல் என கார்த்தி ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறுத்தையாக சீறுகிறார்.

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர் டாக்டர் படிப்பை முடித்து விட்டு நடிகையாக விருமன் படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு அப்படியே ஒரு மதுரைக்காரப் பொண்ணாகவே தேன் எனும் கதாபாத்திரத்தில் திமிரும் அழகுடன் நடித்திருக்கிறார் அதிதி ஷங்கர். இடைவேளை காட்சியின் போது பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்க கார்த்திக்கு அவர் அடிக்கும் லிப் கிஸ் காட்சி ரசிகர்களை ஷாக் ஆக்குகிறது. தேன் இனிச்சாங்களான்னு கார்த்திக்குத் தான் வெளிச்சம். நடிப்பில் நல்ல துவக்கம் தான்.

தங்கையின் சாவுக்கு மச்சான் தான் காரணம் என்பதால், சகோதரர்களான கருணாஸ் மற்றும் ராஜ்கிரணும் பிரகாஷ் ராஜுக்கே எதிராகவே இருப்பார்கள். வில்லன் ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட நடுவில் இருப்பவர்கள் சிலர் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பகையை பயன்படுத்தி சொத்துக்களை அபகரிக்க போடும் திட்டம் என்ன ஆகிறது, விருமன் எப்படி முறியடிக்கிறான், ஒவ்வொரு பிரச்சனையும் ரிவீல் செய்ய தேன் எப்படி உதவுகிறாள் என்பது தான் மொத்தக் கதையே..

படத்தின் பிளஸ்:
கார்த்தி, அதிதி ஷங்கரின் நடிப்பு, யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் மற்றும் பாடல்கள்

படத்தின்மைனஸ்:
சூரி மற்றும் ரோபா சங்கர் மகள் இந்திரஜா சங்கர் பண்ணும் காமெடி

விருமன் – ஐ ஜாலியாக குடும்பத்துடன்  பார்க்கலாம்.