Saturday, February 14
Shadow

மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு இசை அஞ்சலியாக உருவான ‘விஸ்வராகம்’

மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு இசை அஞ்சலியாக உருவான ‘விஸ்வராகம்’ என்ற இசை ஆல்பம், கவிஞரும் பன்முகக் கலைஞருமான சுமதி ராம் வழங்கலில், தைப்பொங்கல் திருநாளான 2026 ஜனவரி 14 அன்று வெளியிடப்பட்டது.
தென்னிந்திய இசை வரலாற்றில் காலம் கடந்தும் பேசப்படும் மெலோடி மாஸ்டர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் இசைப் பயணத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் உருவான இந்த ஆல்பம், இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒரு ஆன்மார்த்தமான இசை யாத்திரையின் நிறைவு வடிவமாக அமைந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த கவிஞர் சுமதி ராம், தனது கவிதைத் தொகுப்பை எம். எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் சமர்ப்பித்த அந்த சந்திப்பு, குரு–சிஷ்ய உறவின் அடையாளமாகவும், இசைக்கான ஒரு நீண்ட பயணத்தின் தொடக்கமாகவும் மாறியது. அந்த உறவின் பயனாக உருவானதே ‘விஸ்வராகம்’ ஆல்பம்.


ஆங்கில இலக்கியம் பயின்ற சுமதி ராமின் 22 தமிழ் கவிதைகளுக்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ள இந்த முயற்சி, ஒரு குருவிற்கான மரியாதையும், ஒரு மாணவியின் நன்றியும் கலந்த ஒரு வரலாற்றுச் சாதனையாக கருதப்படுகிறது. குறிப்பாக, தனது நீண்ட இசைப் பயணத்தில் ஒரு பெண் பாடலாசிரியருடன் எம். எஸ். விஸ்வநாதன் இணைந்து பணியாற்றிய முதல் முயற்சி இதுவாகும்.
‘விஸ்வராகம் – பகுதி 1’ ஆல்பம் Audioverse Music லேபிள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் பாடல்கள்:
• வீணா பிட் – ராஜேஷ் வைத்யா & எம். எஸ். விஸ்வநாதன்
• ஓம்… காற்றைப் போல – ஹரிஹரன், சங்கர் மகாதேவன், உன்னிகிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், அனந்த நாராயணன், பாம்பே ஜெயஸ்ரீ, சுஜாதா, ஹரிணி, கல்பனா
• மனசு கொஞ்சம் – எம். எஸ். விஸ்வநாதன் & பாம்பே ஜெயஸ்ரீ
• விஸ்வராகம் – எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இதனைத் தொடர்ந்து, எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெயராம் அவர்களுக்கான இசை அஞ்சலியாக ‘விஸ்வராகம் – பகுதி 2’ தயாராகி வருகிறது. மீதமுள்ள பாடல்கள் மாதந்தோறும் வெளியிடப்பட உள்ளன.

இயக்குநர், கவிஞர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமைகள் கொண்ட சுமதி ராம், ‘விஸ்வ துளசி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்த அடையாளம் பெற்றவர். அந்தப் படத்தின் இசைக்காக எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ரெமி விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘GANDHI – Mantras of Compassion’ ஆல்பத்தின் இணைத் தயாரிப்பாளராகவும், இளையராஜா, மூன்று முறை கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி ஆகியோருடன் பணியாற்றிய அனுபவமும் அவருடைய கலைப் பயணத்திற்கு பெருமை சேர்க்கிறது.
எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா 2028 ஜூன் 14 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டதோடு, அதே நாளில் மலைவாழ் மக்களுக்காக ‘எம். எஸ். வி. மருத்துவமனை’ திறக்கப்பட்டது. அந்த முயற்சியை மையமாகக் கொண்ட ‘ஜெவி’ (GEVI) திரைப்படம் 2026 ஆஸ்கார் விருதுப் போட்டியில் இடம் பெற்றுள்ளதுடன், இதில் சுமதி ராம் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.


ஒரு ஆல்பமாக மட்டுமல்ல, ஒரு இசை யுகத்திற்கு செலுத்தப்படும் மரியாதையாகவும், ஒரு குருவிற்கு மாணவி செலுத்தும் நன்றிக் கடனாகவும் ‘விஸ்வராகம்’ அமைந்துள்ளது.

ஆச்சார்ய தேவோ பவ!
குரு தேவோ பவ!