
விஜய் சேதுபதியின் 33வது படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு ஊட்டியில் ஆரம்பமான சில நாட்களில் அப்படத்திலிருந்து அமலாபால் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அமலா பால் தயாரிப்பு நிறுவனத்துடன் நட்பு ரீதியாக இருக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி அவரை படத்திலிருந்து நீக்கியதாக செய்திகள் பரவின. ஆனால், ‘ஆடை’ டீசரைப் பார்த்த பிறகுதான் இந்தப் படத்திலிருந்து தன்னை நீக்கியிருப்பார்கள் என சந்தேகிப்பதாக அறிக்கை ஒன்றின் மூலம் அமலா பால் தெரிவித்துள்ளார்.
“தயாரிப்பு நிறுவனத்துடன் நட்பு ரீதியாக இல்லை என்பதெல்லாம் தவறான தகவல். இதற்கு முன் நான் நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் கூட என் சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளேன். மேலும், பட வெளியீட்டிற்காக தயாரிப்பாளருக்கு பண உதவியும் செய்துள்ளேன். ‘அதோ அந்த பறவை போல’ படத்திற்காக ஒரு கிராமத்து வீட்டில் தங்கி நடித்துக் கொடுத்தேன். ‘ஆடை’ படத்தில் மிகக் குறைந்த சம்பளத்தில் நடித்துள்ளேன்.
தற்போது மும்பையில் விஜய் சேதுபதியின் படத்திற்காகத்தான் என் சொந்த செலவில் வந்து, தங்கி ஆடைகளைத் தேர்வு செய்து கொண்டிருந்தேன். தயாரிப்பாளர் திடீரென எனக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பி படத்தில் நான் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஊட்டியில் தங்குமிடம் பற்றிய பிரச்சினையை மட்டும் அவர் ஆதாரமாகச் சொல்கிறார் என நினைக்கிறேன். என்னை நீக்குவதற்கு முன்பாக என்னிடம் பேசியிருக்கலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
