
வைல்ட் தமிழ்நாடு விமர்சனம்: தமிழ்நாட்டின் இயற்கையை வெள்ளித்திரையில் கொண்டாடும் கலைப் பயணம்!
தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள், வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வைல்ட் தமிழ்நாடு’, வழக்கமான வனவிலங்கு ஆவணப்படங்களின் வரிசையில் மட்டும் நிற்காமல், ஒரு முழுமையான கலைப் படைப்பாக உருவாகியுள்ளது.
தமிழர் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய சங்க இலக்கியத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலப்பரப்பிலும் வாழும் உயிரினங்கள், அவற்றின் இயற்கையான சூழல் மற்றும் வாழ்வியல் போராட்டங்கள் திரைக்கதையைப் போன்ற ஒரு சுவாரஸ்யமான வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் முதல் தமிழ்நாட்டின் கடலடி உலகம் வரை பயணிக்கும் இந்த ஆவணப்படம், இதுவரை பலரும் கண்டிராத இயற்கையின் அரிய காட்சிகளை திரையில் பதிவு செய்கிறது. வனவிலங்குகளின் அன்றாட வாழ்க்கை, வேட்டையாடுதல், இனப்பெருக்கம், உணவுத் தேடல் மற்றும் இயற்கையோடு அவை கொண்டுள்ள தொடர்பு ஆகியவை தரமான ஒளிப்பதிவின் மூலம் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் ஒரு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம், பார்வையாளர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஒளிப்பதிவு, இயற்கையான ஒலிகள், விலங்குகளின் அசைவுகள் மற்றும் காட்சிகளுக்கேற்ப அமைக்கப்பட்ட பின்னணி இசை ஆகியவை பார்வையாளர்களை நேரடியாக காட்டு சூழலுக்குள் அழைத்துச் செல்லும் அனுபவத்தை வழங்குகின்றன.
இந்த ஆவணப்படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று நடிகர் அரவிந்த் சாமியின் வசீகரமான ஆங்கில பின்னணிக் குரல். அவரது தெளிவான மற்றும் கம்பீரமான Narration, காட்சிகளின் உணர்வோடு ஒன்றிணைந்து படத்திற்கு கூடுதல் வலிமையை சேர்க்கிறது.
கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜின் பின்னணி இசை ‘வைல்ட் தமிழ்நாடு’ படத்தின் மற்றொரு முக்கிய பலமாக அமைந்துள்ளது. இயற்கையின் அமைதி, விலங்குகளின் பதற்றம், காடுகளின் மர்மம் மற்றும் உயிர்களின் அசைவுகள் ஆகிய ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ப அவரது இசை அமைக்கப்பட்டுள்ளது. காட்சியும் இசையும் இணையும் பல இடங்கள் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகின்றன.
செப்டம்பர் 7, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான ‘வைல்ட் தமிழ்நாடு’ திரைப்படத்திற்கு முன்னதாக சென்னையில் பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர், இந்த ஒரு மணி நேர ஆவணப்படத்தை உருவாக்குவதற்காக சுமார் ஐந்து ஆண்டுகள் களப்பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும், 300 நாட்களுக்கும் மேலாக காடுகளுக்குள் தங்கி படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
ஒரு மாநிலத்தின் இயற்கை வளத்தையும் வனவிலங்குகளையும் வெறுமனே பதிவு செய்வதோடு நிற்காமல், அவற்றின் பின்னால் இருக்கும் வாழ்வியல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பார்வையாளர்களுக்கு புரிய வைக்கும் முயற்சியாக ‘வைல்ட் தமிழ்நாடு’ உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் இயற்கையை இதுவரை திரையில் கண்டிராத புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தும் இந்த படம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு இயற்கை, வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த திரையரங்கு அனுபவமாகவும் இது அமைகிறது.
மொத்தத்தில்:
‘வைல்ட் தமிழ்நாடு’ வெறும் வனவிலங்கு ஆவணப்படம் அல்ல; தமிழ்நாட்டின் இயற்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு காட்சிக் கவிதை. ஐந்திணை நிலங்களின் அடிப்படையில் உயிரினங்களின் உலகத்தை அழகாக பதிவு செய்து, தரமான ஒளிப்பதிவு, சர்வதேச தரத்திலான பின்னணி இசை மற்றும் அரவிந்த் சாமியின் கவர்ச்சிகரமான பின்னணிக் குரலுடன் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம், ஒவ்வொரு தமிழரும் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டிய படைப்பாகும்.
ரேட்டிங்: 3.5/5
