Saturday, April 20
Shadow

சூர்யா தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட பசுமை ஆவடி திட்ட தொடக்க விழா

இயற்கை என்பது நம் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து அல்ல. நாம் அடுத்த தலைமுறையிடம் வாங்கியுள்ள கடன்” என்று சொல்லுவார்கள். நம்முடைய வருங்கால சந்ததியிடம் பெற்றுள்ள கடனை, ‘இயற்கையைப் போற்றி பாதுகாப்பாக சுற்றுச்சுழலுடன்’ அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் முயற்சியே “யாதும் ஊரே” அமைப்பு. நம் அடுத்த தலைமுறையினருக்கு வசதியான வாழ்க்கையைப் பரிசளிக்க வாழ்க்கை முழுவதும் ஓடுகிற நாம், அவர்கள் நல்ல காற்றை சுவாசிக்கவும், நல்ல நீரை பருகவும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலில் வாழவும் தேவையான அக்கறையை எடுப்பதில்லை. பசுமை சூழ்ந்த ஆரோக்கியமான சுற்றுச்சூழலே நம் பிள்ளைகளுக்கு நாம் அளிக்கும் சிறந்த பரிசு. இதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் ‘யாதும் ஊரே’ செயல்படுகிறது.

பசுமை ஆவடி :

சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுக்கும் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைத்து முழுமையான சுற்றுச்சூழல் உருவாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நான்கு முக்கிய செயல் திட்டங்களின் மூலம் வகுத்தது யாதும் ஊரே. ’அனைவருக்கும் சுற்றுச்சூழல் கல்வி, நீர் நிலைகளை பாதுகாப்பதும் பராமரிப்பதும், மண்ணுக்கேற்ற மரங்களை நடுவதும் பாராமரிப்பதும், திடக்கழிவு மேலாண்மை’ ஆகிய நான்கு செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தினால் மட்டுமே முழுமையான சுற்றுச்சூழல் மாற்றம் வரும்.
தமிழக அரசின் ஒத்துழைப்போடு முதலில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பசுமைக்கான மாற்றத்தை முன்னோட்டமாக கொண்டு வர வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி சட்ட மன்ற தொகுதியில் ‘யாதும் ஊரே” அமைப்பின் முன்மாதிரி செயல் திட்டத்தை நிகழ்த்தி ஒரு முன்னுதாரணத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. நினைத்த மாற்றத்தை ஆவடி தொகுதியில் நிகழ்த்திக் காட்டியபிறகு தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு இதை விரிவுப்படுத்துவதே எதிர்கால திட்டமாகும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :

கடந்த ஒரு வாரமாக “பசுமை ஆவடி” திட்டத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆவடியில் உள்ள பெரும்பாலான பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, ஆவடி நகர பேருந்து நிலையத்தில் பல்வேறு பள்ளி மாணவர்கள், ஓவியர்கள் மற்றும் யாதும் ஊரே தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியங்களை சுவர்களில் வரைந்தனர். பொது இடங்கள் மற்றும் பள்ளி,கல்லூரிகளில் 1610 மரக்கன்றுகளை பொது மக்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் நடப்பட்டது. ‘மாற்று ஊடக மையம்’ கலைக்குழுவின் மூலம் தினந்தோறும் தொகுதியின் மையப்பகுதியில், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் பள்ளி,கல்லூரிகளில் சுற்றுச்சூழல் கருத்துக்களை விளக்கி 50 கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டது. ஆவடி தொகுதியில் உள்ள சுமார் 120 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பசுமை ஆவடி திட்டம் குறித்த விழிப்புணர்வும்,அதைச் சார்ந்த கட்டுரை, ஓவியம், கவிதை உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 2493 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு தொடக்க விழாவில் பரிசளிப்பு வழங்கப்பட்டது.

தொடக்கவிழா :

14.8.2016 அன்று தமிழக அரசு மற்றும் ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் திரு. மாஃபா க. பாண்டியராஜன் அவர்களின் ஒத்துழைப்போடு ஆவடியில் ‘பசுமை ஆவடி’ திட்டம் தொடங்கப்பட்டது. ஆவடியை பசுமையாக்கும் பயணத்தில் ஒத்த கருத்துடைய இப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள்,மாணவர்கள், இல்லத்தரசிகள், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் ,அரசு உயர் அதிகாரிகள், லக்ஷ்மி விலாஸ் வங்கி, அடையார் ஆனந்த பவன், பொன்னு வணிக வளாகம், சுராஜ் கார்ஸ்,சாந்தி ரியல் எஸ்டேட்,ஆர்.ஆர்.குழுமம் மற்றும் பல வங்கிகள், வணிகர்கள், , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆவடியில் நிகழ வேண்டிய சுற்றுச்சூழல் மாற்றங்களைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவள்ளுவர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு. சுந்தரவல்லி அவர்கள் தலைமையேற்க, ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் திரு. மாஃபா க. பாண்டியராஜன் சிறப்புரை வழங்கினார். நடிகர் திரு. சூர்யா ‘பசுமை ஆவடி’ திட்டத்தின் செயல் வடிவத்தை விளக்கிப் பேசினார். மாணவர்களிடம் மரக்கன்றுகள் ஒப்படைக்கப்பட்டு ‘பசுமை ஆவடி’ திட்டம் தொடங்கப்பட்டது, நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக அமைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஆவடியை பசுமையாக்க, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து ஊறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் பசுமைப் பயணத்தைத் தொடங்குவதற்கான ஒரு முன்னோட்டமாக ‘பசுமை ஆவடி’ நிகழ்ச்சி அமைந்தது

Leave a Reply