Monday, October 26
Shadow

42 வருடங்களுக்கு பிறகு உயிருள்ளவரை உஷா படம் ரீ-ரிலீஸ்: டி. ராஜேந்தர் அறிவிப்பு

42 வருடங்களுக்கு பிறகு உயிருள்ளவரை உஷா படம் ரீ-ரிலீஸ்: டி. ராஜேந்தர் அறிவிப்பு

சென்னை, ஆகஸ்ட் 21:
பிரபல இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் டி. ராஜேந்தர் இயக்கிய உயிருள்ளவரை உஷா படம் 42 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.

1983-ஆம் ஆண்டு தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி. ராஜேந்தர் எழுதி இயக்கிய இப்படம் அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் கங்கா, நளினி, ராதாரவி, சரிதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். “செயின் ஜெயபால்” என்ற கதாபாத்திரத்தில் டி. ராஜேந்தர் தானே நடித்தார்.

படத்தை ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததாகவும், ஆனால் தயாரிப்பு சிக்கல்களால் அந்த வாய்ப்பு சாத்தியமாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரீ-ரிலீஸுக்காக படம் 4K டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, இசை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜேந்தர் கூறினார். வரும் செப்டம்பரில் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு தலை ராகம் உள்ளிட்ட தனது பிற படங்களையும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

“மீண்டும் படம் இயக்குவீர்களா?” என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக. மிகப்பெரிய படமாக இருக்கும். நான்கு கதாநாயகிகளை அறிமுகப்படுத்துவதோடு, AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன்” என அவர் உறுதியளித்தார்.

நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, தனது உடல்நலக்குறைவின்போது மகன் சிலம்பரசன் அமெரிக்காவில் சிகிச்சை அளித்த அனுபவத்தையும், அதன் பின்னர் “அன்பு மட்டுமே பகிர்வேன்” என புதிய முடிவை எடுத்ததையும் அவர் பகிர்ந்தார்.

அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் தவிர்த்தார்.