
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று மனுத் தாக்கல் செய்த விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன், பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட பலரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்று பாஜக சார்பில் கரு.நாகராஜன் மனுதாக்கல் செய்தார். மேலும் விஷால், தீபா உள்ளிட்ட சிலரும் மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில், நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும்.
ஆனால், விஷால் வேட்பு மனுவை முன்மொழிந்த 10 பேரில் முன்மொழியாத 2 பேர் பெயர் இடம்பெற்றிருந்ததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த விஷால் தேர்தல் அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் தண்டையார்பேட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
