Wednesday, April 22
Shadow

கார்கில் – திரைவிமர்சனம்

படம் முழுக்க ஒருவர் மட்டுமே நடித்திருக்கிற படம்; தமிழ் சினிமாவில் புது முயற்சி!

ஹீரோயின் பிரார்னாசாதனி ஒரு பாடலில் ஜிஷ்னுமோனுடன் ஜில்லாட்டம் போட்டுவிட்டுப் போகிறார். இவரை கணக்கில் எடுத்துக் கொண்டால் இருவர் நடித்த படம் இது!

ஐடி பணியிலிருக்கும் அந்த இளைஞன் ஒரு இண்டர்வியூவில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி படு உற்சாகமாய் தானே கார் ஓட்டிக்கொண்டு பயணிக்கிறான்.

அப்போது காதலியிடமிருந்து போன் வருகிறது. கொஞ்சலாய் பேசத் தொடங்கி செல்லச் சண்டை உருவாகி காதலே முறிந்துபோகுமளவுக்கு அந்த போன் பேச்சு சீரியஸாகிறது.

அதே பயணத்தில் அந்த இளைஞனின் பாஸிடமிருந்து போன் வருகிறது. போனில் பேசிப்பேசி கைவசமிருக்கும் வேலை போய்விடுகிறது.

முன்னாள் காதலியிடமிருந்து போன்வருகிறது. அந்த போன் காலினாலும் ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகிறான் அந்த இளைஞன்.

போதாக்குறைக்கு, யாரோ கடன் வாங்கிய 3 லட்சத்துக்காக இந்த இளைஞனுக்கு தவறுதலாகபோனைப் போட்டு கழுத்தறுக்கும் இன்னொரு ஆசாமி!

இப்படி ,சென்னையிலிருந்து உற்சாகமாக கிளம்பிய அந்த இளைஞன் பெங்களூரு போய்ச் சேர்வதற்குள் ஆறேழு பேரிடம் பொனில் பேசிப்பேசி நொந்து நூலாகிறான்.

அப்படி நொந்துநூலான இளைஞன் அடுத்து என்னவானான் என்பதே கார்கில் படத்தின் கதை, திரைக்கதை எல்லாமே!

காரில் போகும்போது மனப்போராட்டங்களைச் சந்திக்கிற இளைஞனின் கதை என்பதால் படத்துக்குப் பெயர் கார்கில்!

காரில் போனில் பேசிக்கொண்டே பயணிப்பது மட்டும்தான் ஹீரோ ஜிஷ்னுமோனின் வேலை. ஒவ்வொருவர் போனில் பேசும்போதும் அதற்கேற்ப முகபாவங்களில் சின்னச் சின்ன மாற்றங்கள் காட்டுவது தவிர வேறெந்த வேலையுமில்லை. கதைக்களம் அப்படி!

ஹீரோவுடன் போனில் யாரெல்லாம் போனில் பேசுகிறார்களோ அவர்களின் உரையாடலை விடாமல் கேட்டால் மட்டுமே கதை புரியும்

ஒரு கேரக்டரை மட்டுமே வைத்துக் கொண்டு கதைக்களம் அமைத்திருக்கிற இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய முயற்சியை பாராட்டலாம்.

முயற்சி புதிதாக இருந்தாலும் எல்லா கேரக்டர்களும் ஹீரோவுடன் அத்தனைக் காட்சிகளிலும் போனில் பேசிக் கொண்டேயிருப்பது தவிர ,ரசிப்பதற்கு வேறெந்த அம்சமும் இல்லாததால் 100 – 200 என டிக்கெட்டுக்கு செலவழித்து வருகிற ரசிகர்கள் திருப்தியடைவார்களா என்பது பெருத்த சந்தேகம்!