Sunday, June 28
Shadow

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பிறந்த தினம் இவரை பற்றிய ஒரு சில வரிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர் பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.

தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.

இவர் 2006 ஆண்டு வடபழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.

ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.தேசிய விருது வாங்கிய கவிஞர்கள் பட்டியலில் இவருக்கும் இடம் உண்டு

இவர் பாடலெழுதிய தமிழ் திரைப்படங்கள்

மாற்றான், 7ஜி ரெயின்போ காலனி, நந்தா, வெயில், புதுப்பேட்டை, சந்திரமுகி, சிவாஜி த பாஸ், கற்றது தமிழ், கஜினி, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தம்பி, காதல் கொண்டேன், காதல், மன்மதன், சண்டக்கோழி, தீபாவளி, போக்கிரி, பீமா, வாழ்த்துகள், அழகிய தமிழ் மகன், சத்தம் போடாதே, கல்லூரி, வேல், சக்கரக்கட்டி, சந்தோஷ் சுப்பிரமணியம், ஆறு, வாரணம் ஆயிரம், சிவா மனசுல சக்தி, அயன், நாடோடிகள், வாமனன், ஆதவன், சுறா, யாரடி நீ மோகினி, பையா, அங்காடித் தெரு, சிங்கம், களவாணி, மதராசப்பட்டினம், நான் மகான் அல்ல, வானம், ரத்த சரித்திரம், போராளி, எத்தன், வேட்டை, எங்கேயும் காதல், அவன் இவன், பொய் சொல்லப் போறோம், நர்த்தகி, தெய்வத் திருமகள், வந்தான் வென்றான், நண்பன், அரவான், மன்னா, வழக்கு எண் 18/9, பில்லா 2, நீதானே எந்தன் பொன்வசந்தம்

நம் கண்ணிலிருந்து மறைந்து விட்ட அந்த அன்பு தம்பியின் கவித் துளிகள் சில இன்றைய நினைவுகளுக்காக?

?வாழ்க்கை

கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்துக்கொள்கிறார்

..

?ஸ்தல புராணம்

பெருமாள் கோயில் பிராகாரமும்
பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்
ஆயிரங்கால் மண்டபத்தின்
அமானுஷ்ய இருட்டும்கூட
காலத்தில் கரையாமல்
அப்படியே இருக்கின்றன நண்பா!

தன் தம்பியுடன் வந்து
நம் பார்வைகளுடன் திரும்பும்
காயத்ரியின்
கால் தடங்களில் மட்டும்
சிமென்ட் பூசியிருக்கிறார்கள்!

..

?மரணம் பற்றிய வதந்தி

திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்

எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்..
“இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்!

..

?உயில்

மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!

..

?குட்டி புத்தரின் கோபம்

“” இவர் பேரு புத்தர்
இன்னொரு பேரு ஆதவன்
அந்தப் பேரைத்தான்
உனக்கு வைத்திருக்கிறேன்!”
என்றேன் மகனிடம்.

கோபமாக சொன்னான்;
“”அவர் பேரு புத்தர்
நான்தான் ஆதவன்!’

..

?நெஞ்சொடு கிளத்தல்

சுடலையேகி வேகும் வரை
சூத்திரம் இதுதான் சுற்றுப் பார்
உடலைவிட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப் பார்!

..

?உள்ளும் புறமும்

அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்குகின்றன?