
சர்கார் படத்தின் போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்று போஸ் கொடுத்ததற்கு பாமக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், திரைப்படங்களைப்பார்த்து யாரும் தவறு செய்வதில்லை.
சினிமாவை பார்த்து யாரும் கெட்டு விட மாட்டார்கள், விஜய்யை மட்டும் எதிர்ப்பது ஏன் என விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார் டி.ராஜேந்தர். அதோடு, இப்படி சொல்பவர்கள் சிகரெட்டையே நிறுத்த வேண்டும் என்று அரசுக்கு எதிராக போராட வேண்டியதானே என்றும் கூறினார்.
இதையடுத்து ஜூங்கா படத்தின் பிரமோஷனில் விஜய் சேதுபதி பேசும்போது, என் அப்பா சிகரெட் பிடிப்பார். ஆனால் நான் புகைப்பிடிக்க மாட்டேன். அதேபோல் பல படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் அதை செய்யவில்லையே. அதனால் சினிமாவைப்பார்த்து ரசிகர்கள் கெட்டுப்போவார்கள் என்று செல்வதை ஏற்க முடியாது.
விஜய் மட்டும் தான் படங்களில் சிகரெட் பிடிக்கிறாரா? மற்ற நடிகர்கள் சிகரெட் பிடிக்கவில்லையா? இவர்கள் விளம்பர நோக்கத்திற்காக விஜய்யை எதிர்க்கிறார்கள். சிகரெட் பிடிப்பது உடல்நலத்திற்கு கேடானது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கும் இவர்கள் பீடி, சிகரெட் நிறுவனங்களுக்கு எதிராக போராட வேண்டியதானே என்றும் கேள்வி எழுப்பினார் விஜய் சேதுபதி.
