Wednesday, April 22
Shadow

பழம்பெரும் நடிகர் சி. எஸ். ஜெயராமன் மறைந்த தினம்

சி. எஸ். ஜெயராமன் எனப் பொதுவாக அறியப்படும் சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் ஒரு நடிகரும், இசையமைப்பாளரும், பிரபல திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் பாடிய பாடல்கள் 1940க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான பல திரைப்படங்களில் இடம்பெற்றன.

ஜெயராமன் கோயில் நகரமான சிதம்பரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர். இவர் தி. மு. க தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார். தொடக்கத்தில் கருணாநிதி ஒரு திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயராமன்.

ஜெயராமன் 1917 ஆண்டு தை மாதம் 6 நாள் பிறந்தார்.[1] ஜெயராமன், கிருஷ்ண லீலா (1934), பக்த துருவன் (1935), நல்ல தங்காள் (1935), லீலாவதி சுலோச்சனா (1936), இழந்த காதல் (1941), பூம்பாவை (1944), கிருஷ்ண பக்தி (1948) ஆகிய படங்களில் நடித்தார்.

உதயனன் வாசவதத்தா (1946), ரத்தக்கண்ணீர் (1954) ஆகிய இரண்டு படங்களுக்குத் தனியாக இசையமைத்துள்ளார். விஜயகுமாரி (1950), கிருஷ்ண விஜயம் (1950) ஆகிய படங்களில் இணை இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

திரைப்படத்துறையில் ஒரு பின்னணிப் பாடகராகவே இவர் புகழ் பெற்றார். இவரது இசைத்திறமை காரணமாக இவர் தமிழிசைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் தமிழில் மட்டுமன்றிச் சில கன்னடப் பாடல்களையும் பாடியுள்ளார்.

ஜெயராமன் 1995 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி காலமானார்.