Saturday, June 27
Shadow

நடிகர் எஸ். வி. சகஸ்ரநாமம் மறைந்த தினம் 

எஸ். வி. சகஸ்ரநாமம்  நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகரும் ஆவார். தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர். 200க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்த சகஸ்ரநாமம் தமது வறிய, பெரிய குடும்பத்தின் வீட்டுக் கஷ்டத்தினால் சித்தப்பாவின் பலகாரக் கடையில் வேலை செய்ய சென்றபோது தற்செயலாக உள்ளூரில் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்து, குடும்ப நெருக்கடியிலிருந்து தப்பித்துப் போய்ச் சுதந்திரமாக ஆடிப்பாடி நடிக்கும் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டார். வீட்டை விட்டு ஓடிப் போய் அப்பாவின் பொய்க் கையெழுத்தைப் போட்டு, மதுரை பாலசண்முகானந்த சபா மேலாளர் காமேஸ்வர அய்யரிடம், “சம்மதம்” என்று கடிதத்தைக் கொடுத்து நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டார். இருப்பினும் காமேசுவர அய்யர் இதைக் கண்டுபிடித்து அவரது தந்தையின் உடன்பாட்டுடன் அவரை நாடக கம்பனியில் சேர்த்துக் கொண்டார்.
பாய்ஸ் கம்பெனிகள் ஆங்கில அரசாங்க கெடுபிடிகளுக்குப் பயப்படாமல் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை எதிரொலிக்கும் நாடகங்களை நிகழ்த்தி மக்களை விடுதலைப் போராட்டத்துக்கு ஆவேசப்படுத்தின. வெ. சாமிநாத சர்மா எழுதிய பாணபுரத்து வீரன் என்ற ஆங்கிலத் தழுவல் நாவல், விடுதலை எழுச்சியைப் பூடகமாகத் தூண்டும் விதமாக இருந்தது. பாரதியார் பாடல்களையும் சேர்த்து நாடகமாக உரையாடல்களை எழுதியவர் பாஸ்கரதாஸ்.
அவருடைய மொத்த அனுபவமும் 1946 க்குப் பின் ஒரு நல்ல நாடகக் குழுவை ஏற்று நடத்துவதற்கான திறமையையும் துணிவையும் கொடுத்தது.
“கலைவாணர்” என். எஸ். கிருஷ்ணன் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை சென்று மீண்டு வரும்வரை என். எஸ். கே. நாடக சபையின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும், சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் வெற்றிகரமாக நாடகங்கள் நடத்தியிருக்கிறார். 1950க்குப் பிறகு திரைப்படங்களில் வாய்ப்புகள் இருந்த போதும் சகஸ்ரநாமம், சேவா ஸ்டேஜ் என்கிற குழுவை ஆரம்பித்துத் தமிழ் நாடகங்களுக்குத் தற்காலத் தன்மையை ஏற்றியிருக்கிறார். மேடை அரங்க நிர்மாணம், ஒளி அமைப்புகள் இவற்றிலெல்லாம் கலாபூர்வமான நூதன மாற்றத்தைப் பொருட்செலவைப் பார்க்காமல் நிறுவிக் காட்டியது சேவா ஸ்டேஜ் நாடக மன்றம்தான். நாடகத்தில் பின்பாட்டு உத்தியை அறிமுகப்படுத்தியதும் சகஸ்ரநாமத்தின் முயற்சிதான். சேவா ஸ்டேஜ் நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்து அனுபவமும் புகழும் பெற்றதால் திரை நட்சத்திரங்களானவர்கள் பலர். இவர்களில் ஆர். முத்துராமன், தேவிகா, எஸ்.என். லட்சுமி முதலியவர்களைக் குறிப்பிடலாம்.
இவர் நடித்த திரைப்படங்கள்
பூம்பாவை, நல்ல தம்பி, சிங்காரி, மர்மயோகி, மணமகள், பராசக்தி, கண்கள், குலதெய்வம், நாலுவேலி நிலம், அல்லி பெற்ற பிள்ளை, போலீஸ்காரன் மகள், படித்தால் மட்டும் போதுமா, ஆனந்த ஜோதி, உரிமைக்குரல், மேனகா