
சத்யராஜ் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார்.
வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார்.
1987இல் சத்யராஜூம், அவருடைய மனைவியும், சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரைப் பத்திரிகை வைத்து அழைத்தனர். அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடனும், அமைச்சர் முத்துசாமியுடனும் சென்றார். அதன்பின் திருமணத்திற்கு வந்தமைக்கு எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்ல சென்ற போது எம்.ஜி.ஆர் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையைப் பரிசாகக் கேட்டு வாங்கிக் கொண்டார் சத்யராஜ்.
சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காகப் பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக மணியம்மை வேடத்தில் நடித்துள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். இதில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
இவர் நடித்த படங்களில் முக்கியமானவை: பாகுபலி, வேதம் புதிது, வால்டர் வெற்றிவேல், மலபார் போலீஸ், பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, குங்குமப்பொட்டுக் கவுண்டர், இங்கிலிஸ்காரன், சுயேட்சை எம்.எல்.ஏ, வில்லாதி வில்லன், ஏர்போட், நண்பன், நூறாவது நாள், பூவிழி வாசலிலே, அண்ணா நகர் முதல் தெரு, சின்னதம்பி பெரியதம்பி, ஜல்லிக்கட்டு, அமைதிப்படை, நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ, கடலோரக் கவிதைகள், ரிக்சா மாமா
