Tuesday, March 21
Shadow

நடிகர் சிவாஜி கணேசன் மறைந்த தின பதிவு

சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

‘சிவாஜி’ கணேசன், சின்னையா மன்ராயா் – ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார்.

சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

‘சிவாஜி’ கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் “பாசமலர்”, “பாவ மன்னிப்பு”, “பார்த்தால் பசி தீரும்”, “வீரபாண்டியக் கட்டபொம்மன்” போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.