Sunday, April 28
Shadow

“அகிலன்” – திரை விமர்சனம்! Rank 2.5/5

இந்தியப் பெருங்கடலின் ராஜா “அகிலன்” திரை விமர்சனம்!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் அகிலன். பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள அடுத்த படம் இது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது படமும் வெளியாகியுள்ளது. இதுவரை அதிகம் பார்க்காத துறைமுகம் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

சென்னை துறைமுகத்தில் உள்ள சரக்கு கப்பல்களில் சட்டவிரோத பொருட்களை ஏற்றி அனுப்பும் வேலையை செய்து வருபவர் ஹரிஷ் பேரடி. அவரிடம் அடியாளாக இருப்பவர் ஜெயம்ரவி. துறைமுகமே ஜெயம்ரவியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஹரிஷ் பேரடி போல் சர்வதேச அளவில் மாஃபியா கும்பல் இருக்கிறது . இவர்களுக்கு எல்லாம் தலைவன் ஒருவன் இருக்கிறான். அவனை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஹரிஷ் பேரடிக்கு எதிராக சட்டவிரோத சரக்கு கடத்தல் தொழிலை செய்கிறார் ஜெயம் ரவி. இதனால் கோபமடையும் ஹரிஷ் பேரடி ஜெயம்ரவியை அந்த மாஃபியா கும்பல் தலைவனிடம் கொண்டு செல்கிறான். அப்போது உலக அளவில் தேடிவரும் தீவிரவாதியை கப்பலில் கடந்த வேண்டும் என்று அந்த தலைவன் சொல்ல இதில் நிறைய சிக்கல்கள் இருப்பதால் மற்றவர்கள் தயங்குகிறார்கள். ஜெயம் ரவி தான் செய்துமுடிப்பதாக கூறுகிறார். அப்படி இந்த விஷயத்தை செய்துமுடித்தால் நீ தான் இந்திய பெருங்கடலுக்கு ராஜா என்று அந்த தலைவன் செல்கிறான். ஜெயம்ரவியை பிடிக்க சிறப்பு போலீஸ் அதிகாரி துடித்துக்கொண்டு இருக்க ஜெயம் ரவி எப்படி அந்த தீவிரவாதியை கப்பலில் ஏற்றி நாடுகடத்தினார் ? அதன்பிறகு என்ன ஆனது என்பதே அகிலன்.

இப்போது நான் சொன்னது இடைவேளை வரைக்குமான கதை மட்டுமே அதன்பிறகு படத்தில் இன்னொரு துணைக்கதையும் இருக்கிறது . அது தமிழ் சினிமாவுக்கே உண்டான கமர்ஷியல் புளித்த மாவு கதைதான் . ஆனாலும் அதில் சர்வதேச வறுமை , உணவுப் பஞ்சம், சர்வதேச உதவி என்று கம்யூனிசம் பேசியிருக்கிறார் இயக்குனர்.

ஜெயம் ரவி தன்னால் முடிந்தவரை இப்படத்துக்காக உழைத்துள்ளார். கட்டுமஸ்தான உடம்பு, கோபம் கொண்ட கண்கள் என விரைப்பாக இருக்கிறார். தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். தனது இலக்குக்காக துரோகம் பண்ணி முன்னேறும் நபராக படத்தில் கம்பீரம் காட்டியுள்ளார். ஆரம்பத்தில் கெட்டவனாக தெரியும் இவரது கதாபாத்திரம் போகப் போக எதற்காக இப்படி செய்கிறார் என்ற உண்மை தெரியவரும் போது நமக்கு வேறு ஒருவரின்‌முகம் ஞாபகத்திற்கு வருகிறது. பிரியா பவானி சங்கர் போலீசாக நடித்திருக்கிறார். இவருக்கும் ஜெயம் ரவிக்குமான காட்சிகள் காதல் கடந்து கடமை முந்தி நிற்கிறது. தன்யா ரவிச்சந்திரன் சில காட்சிகள்தான் வருகிறார். மற்ற கதாபாத்திரங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சிராக் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வருபவர்களின் நடிப்பும் பலம். சாம் சிஎஸ் இசையில் ஒரே பாடல்தான். பின்னணி இசை வழக்கம் போல் கத்தியுள்ளார். புதிய கதைக்களத்தை தேர்வு செய்துள்ள இயக்குனர் நிறைய ஆய்வு செய்துள்ளது படத்தில் தெரிகிறது. ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம்கூட ஒட்டவில்லை. ஏதேதோ நடக்கிறது என்ன என்று புரிந்து கொள்வதற்குள் படம் முடிகிறது. ஜெயம் ரவி எதற்காக இதனை செய்கிறார் என்ற காரணம் தெரியவரும்போது ஓகே தான். ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருக்கலாம். துறைமுகம், கப்பல் போக்குவரத்து, டிராபிக், சர்வதேச வணிகம், வியாபாரம், விலைவாசி என ஏகப்பட்ட விஷயங்கள் இக்கதைக்களத்தில் உள்ளன. அதை எல்லாம் வெறும் வசனத்தால் மட்டுமே கடந்து சென்றுள்ளனர். தமிழன்னை என்று ஒரு கப்பல் வருகிறது அதன் பின்புலம் சரியாக விளக்கப்படவில்லை. மொத்தத்தில் நல்ல கதைக்களத்தை தேர்வு செய்த இயக்குனர் திரைக்கதையில் இன்னும் செம்மைப்படுத்தி இருந்திருக்கலாம். ஜெயம் ரவிக்காக ஒரு முறை பார்க்கலாம்.