Thursday, March 28
Shadow

கொன்றால் பாவம் – திரை விமர்சனம்

 


1915ம் ஆண்டு ஆங்கிலத்தில் இலக்கிய நாடகமாக வெளிவந்து பின்னர் கன்னடத்தில் புத்தகமாகவும் வெளிவந்த இந்த கொன்றால் பாவம் திரைப்படத்தை இயக்குனர் தயாள் பத்மநாபன் கன்னடத்தில் முதலில் எடுத்திருந்தார். அங்கு சிறந்த படத்துக்கான மாநில விருதை பெற்றது. அதனை தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் பேசப்பட்டது. தற்போது தனது தாய் மொழியான தமிழில் கொன்றால் பாவம் என்று பெயரிட்டு கொண்டு வந்துள்ளார். படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

இப்படத்தின் கதை 1980களில் நடக்கிறது. சார்லி தனது மனைவி ஈஸ்வரி ராவ், மகள் வரலட்சுமியுடன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அருகே ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ஏழை விவசாயக் குடும்ப பின்னணி கொண்டவர் சார்லி. ஊர் விட்டு ஊர் வந்து கிடைத்த கொஞ்ச நிலத்தில் விவசாயம் செய்து வருபவர். ஆனால் வறுமை காரணமாக அந்த நிலத்தையும் குத்தகைக்கு விட்டுவிட்டு கூலி வேலை செய்துவரும் குடும்பம். இதனால் வரலட்சுமியின் திருமணமும் தள்ளிக்கொண்டே போகிறது. ஒருநாள் சார்லி வீட்டுக்கு வழிப்போக்கனாக வரும் சந்தோஷ் பிரதாப் ஓர் இரவு தங்குவதற்கு மட்டும் அனுமதி கேட்கிறார். முதலில் தயங்கும் சார்லி குடும்பம் பின்னர் சம்மதிக்கிறது. சந்தோஷ் பிரதாப்பிடம் நிறைய பணம் மற்றும் நகைகள் இருப்பதை அறிந்த வரலட்சுமி, சந்தோஷை கொலை செய்துவிட்டு பணத்தை அடைய நினைக்கிறார். அந்த இரவுக்குள் வரலட்சுமி நினைத்தது நடந்ததா? என்பதே கொன்றால் பாவம் படத்தின் கதை.

வரலட்சுமிக்கு இது பெருமைமிகு படம். அப்படியொரு நடிப்பை வழங்கியுள்ளார். அவரது கண்களே ஆயிரம் கதை சொல்கிறது. துறு துறு பேச்சு இப்படத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. ஆசை, காமம், காதல் என எல்லாவற்றையும் அந்த கண்களாலேயே வெளிப்படுத்துகிறார். முதிர்கன்னியின் போராட்டத்தை கண்முன் கொண்டு வந்துள்ளார்.

சார்லி மற்றும் ஈஸ்வரி ராவ் தங்களது அனுபவ நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். ஏழை குடும்பத்தில் ஏற்படும் அத்தனையும் இவர்களது வாழ்விலும் வருகிறது. படபடப்பு, பதற்றம் , பயம் என எல்லா உணர்வுகளையும் இருவரும் அனாயசமாக கடத்துகின்றனர். தன் மகள் பற்றி ஊர் வாய் மெல்லும்போது ஒரு தந்தையாக கொதிக்கும் சார்லியின் நடிப்பு சிறப்பு.

சந்தோஷ் பிரதாப் அழகான நாயகனாக ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்திரமாகவே மாறிவிட்டார். இன்னும் நிறைய தூரம் உள்ளது அவருக்கு பயணிக்க. செண்ட்ராயன் பார்வையற்றவராக ஒரு முக்கியமான கதாபாத்திரம் நன்றாக நடித்துள்ளார். நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றி கதை நகர்ந்தாலும் எங்குமே சலிப்பு ஏற்படாத வண்ணம் திரைக்கதை நம்மை கவர்கிறது. படத்தின் இரண்டு முக்கியமான தூண்கள் செழியனின் ஒளிப்பதிவு மற்றும் சாம் சிஎஸ்ன் பின்னணி இசை. இரண்டுமே வேற ரகம். சாம் சிஎஸ் பின்னணி இசை சாதாரண காட்சிகளை கூட மிகப் பெரிய காட்சிகளாக மாற்றிவிடுகிறது. ஒகேனக்கல் அருவியின் ட்ரோன் காட்சி ரம்மியம். எடிட்டிங் சரியான அளவில் உள்ளது.

ஆசைதான் அழிவுக்கு காரணம் என்பார்கள். ஒருவரின் பேராசை எத்தகைய அழிவை உண்டாக்கும் என்பதை கிளைமாக்ஸ் காட்சி உணர்த்துகிறது. எதிர்பாராத கிளைமாக்ஸ் காட்சி அது. கொன்றால் பாவம் நிச்சயம் வெல்லும்.