
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிகர் தனுஷ் அறிமுகமானார். அப்போது அவரை மிகவும் அலட்சியமாக பார்த்தனர் ஆனால் இன்று அவர் தமிழ் சினிமாவின் முன்னணி இல்லை தவிர்க்க முடியாத ஒரு சகலகலாவல்லவனாக தலை நிமிர்ந்து நிற்கிறார்.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை தனக்குள் அடக்கியுள்ள தனுஷ், சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 17 வருடங்கள் ஆகிறது.
மே 10, 2002ம் ஆண்டு அவர் நாயகனாக நடித்த ‘துள்ளுவதோ இளமை’ படம் வெளிவந்தது. அதன்பின் பல்வேறு விதமான படங்களில் நடித்து தன்னை வளர்த்துக் கொண்டார். ஹிந்தியிலும் அறிமுகமாகி அங்கும் வெற்றி பெற்றார், அமிதாப்பச்சனுடனும் சேர்ந்து நடித்தார். பிரெஞ்ச் மொழி படத்திலும் நடித்தார்.
‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலை எழுதி, பாடி உலகப் புகழ் பெற்றார். ‘ப பாண்டி’ படம் மூலம் இயக்குனர் ஆனார்.
‘ஆடுகளம்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கினார்.
தன் இத்தனை வருடப் பயணத்திற்காக அவர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.அதில்,
“2002, மே 10ம் தேதி வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது. உண்மையிலேயே 17 வருடங்கள் ஆகிவிட்டதா?. எந்த ஆதாரமும் இல்லாத ஒரு பையன், தனித்து ஒரு நடிகராக முடியும் என்று அவனுக்குள் எந்த எண்ணமும் இல்லாதவனுக்கு, உங்கள் இதயத்தை நீங்கள் திறந்து காட்டியது நேற்று நடந்தது போலிருக்கிறது.
என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு என்னுடைய ஆழ்ந்த நன்றி. நல்ல நேரமாக இருந்தாலும், கெட்ட நேரமாக இருந்தாலும், வெற்றி, தோல்வி, ஹிட், பிளாப் என எல்லா சமயங்களிலும் என்னுடன் இருக்கிறீர்கள்.
நன்றி, மிக்க நின்றி. நான் நிறைவான நபர் இல்லை, ஆனால், உங்கள் நிபந்தனையற்ற அன்பு என்னை முன்னெடுத்துச் செல்கிறது. மேலும் கடுமையாக உழைக்க வைக்கிறது. எனக்குள் என்னை சிறந்தவையாக மாற்றுகிறது.
என்னுடைய 17 வருடங்களுக்கான போஸ்டர் டிசைன், வீடியோஸ் எனக்கு பெரும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும், உறுதியையும் நிரப்புகிறது. அன்பை பரப்புங்கள், அன்பை மட்டுமே. தைரியமாக கனவு காணும் உலகமாக உருவாக்குங்கள். எனது வலிமையின் தூண்கள், நீங்கள்தான் நன்றி,” என நண்பர்களுக்கான கடிதமாக எழுதியிருக்கிறார்.