‘வடசென்னை’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்கள் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. மேலும், தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொடி’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் தனுஷ். வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இப்படத்தின் கதைக்களம் அதிரடிக் காட்சி கலைஞர் (ஸ்டண்ட்மேன்) ஒருவரைப் பற்றிய கதையாகும். இக்கதையில் ராஜ்கிரணின் சிறுவயது பாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் தனுஷ்.
‘பவர் பாண்டி’ படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ். தற்போது சென்னையில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.