

நான் மகான் அல்ல, பாண்டியநாடு படத்த மாதிரி சாம்பியன் படமும் ஒரு ரிவஞ் ஸ்டோரி தான். அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் என்ன வித்தியாசம்னா இது ஒரு விளையாட்டு வீரனோட பழிவாங்கல் கதை. உடல் ரீதியா ரொம்ப வலிமையா இருக்கும் ஒரு விளையாட்டு வீரன் ரிவஞ்ச் எடுத்தா, அவன் எந்த அளவிற்கு வயலண்டா மாறுவான் அப்படீங்கறதுதான் இந்த படத்தோட கதை. இந்த படத்துல நிறைய இடத்துல அம்மா செண்டிமெண்ட் இருக்கும். அப்பறம் அந்த அம்மாவோட கனவு நிறைவேறுச்சா இல்லையா அப்படீங்கறதுதான் இந்த படத்தோட முடிவா இருக்கும்.
அஞ்சாதே நரேன் ஒரு முக்கிய பாத்திரத்தில் பயிற்சியாளராக அந்த கதாப்பாத்திரத்துக்கு ரொம்ப கச்சிதமா பொருந்தியிருக்கிறார். இன்னொரு பயிற்சியாளராக இந்தியன் புட்பால் டீம் கேப்டன் ராமன் விஜயன் ரொம்ப நல்லா பண்ணியிருக்கார்.மனோஜ் பாரதிராஜா இந்த படத்துல கதாநாயகனோட தந்தையா வர்றார். மிர்ணாளினி, சௌமியா ரெண்டு பேரும் கதாநாயகியா நடிச்சிருக்காங்க. கதாநாயகனாக விஷ்வா என்கிறவர் அறிமுகமாகிறார். இவர் இந்த படத்துக்காக ஒரு வருஷம் புட்பால் ட்ரைனிங் எடுத்துக்கிட்டார். புட்பால் பயிற்சியாளர் சாந்தானுவிடம் பயிற்சிப்பெற்றார் அவருடைய பேரத்தான் படத்துல நடிகர் நரேனுக்கு வைக்கப்பட்டுள்ளது .
பிசாசு, துப்பறிவாளன் படங்களுக்கு இசையமைத்த அரோல் கரோல்லி இப்படத்திற்கும் இசையமைச்சிருக்கார். ஒளிப்பதிவு சுஜீத் சாரங்கா (துருவங்கள் 16) எடிட்டிங் தியாகு,ஆர்ட் டைரக்டர் சேகர்.

இந்த படமும் வடசென்னை சம்பந்தம் பட்ட கதைதான். அதனால வடசென்னை படம் மாதிரி இதுலயும் அரசியல் பேசியிருக்கீங்களா?
இந்த படம் சுத்தமா அரசியல் சம்பந்தமே இல்லாத ஒரு படம். ஒரு விளையாட்டு வீரனுக்கு அவனது வாழ்கையில என்னென்ன தடங்கல் வருது. அது எந்த மாதிரியான தடங்கல். அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது தான் கதை. இது முழுக்க முழுக்க நான் மகான் அல்ல, பாண்டியநாடு மாதிரி ஒரு முழு கமர்சியல் படம். ஜீவா படம் பார்தீங்கனா லவ் ஸ்போர்ட்ஸ் படமா இருந்துச்சு. இந்த சாம்பியன் படம் ஆக்ஷன் ஸ்போர்ட்ஸ் படமா இருக்கும். அதுவும் எழுபது சதவிகிதம் ஆக்ஷன் படமா இருக்கும்.
சாம்பியன் திரைப்படம் எதனால புட்பால மையமா வச்சி எடுத்தீங்க?
பிரெஞ்சு ஆட்சி எங்க எங்கெல்லாம் நடந்துச்சோ. அங்கெல்லாம் புட்பால் விளையாட்டு அதிகமா விளையாடினாங்க. முக்கியமா இந்த கடலோரப் பகுதிகள் இடத்துல அதிகப்படியா புட்பால் விளையாடுவாங்க. நிறைய கிராமங்கள்ல கபடி அதிகமா விளையாடுவாங்க. நிறைய நகரங்கள்ல கிரிக்கெட்தான் அதிகப்படியா விளையாடுவாங்க. அதேமாதிரி கடலோர பசங்க எல்லாருமே புட்பால் தான் அதிகமா விளையாடுவாங்க. அப்படி இந்த புட்பால மையமா வச்சிதான் இந்த படத்தோட கதை நகர்த்தப் பட்டிருக்கு.
பிகில் படத்துல விஜயும் புட்பால் பயிட்சியாளரா வர்றாரு. அதப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?
பிகில் படத்துக்கு முன்னாடியே நாங்க சாம்பியன் படத்த ஆரம்பிச்சிட்டோம். அதுமட்டுமில்லாம ஸ்போர்ட்ஸ் சம்பந்தமா நிறைய புட்பால் படங்கள் வந்திருக்கு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான புட்பால் படங்கள எடுக்கப் போறாங்க. இங்க நிறைய பேர் லவ் ஸ்டோரி பண்ணிகிட்டிருக்காங்க. அவங்க கிட்டப் போய் நீங்க ஏன் இந்த மாதிரி லவ் ஸ்டோரி எடுக்கறீங்கனு கேக்கப் போறது கிடையாது. ஸ்போர்ட்ஸ் இங்க ரொம்ப அன்னியமாவே இருக்கு. நிறைய ஸ்போர்ட்ஸ் படங்கள் வந்தாதான் அதுக்கு மக்கள் கிட்ட நல்ல ரீச் கிடைக்கும். இது மூலமா யார் வாழ்கையிலயாவது நல்லது நடந்தா சந்தோஷம் தான்.
இந்த படம் மக்களுக்கு என்ன சொல்ல வருது ?
ஸ்போர்ட்ஸ்ல கவனம் செலுத்தும் நிறைய இளைஞர்களுக்கு பல வகையில பிரச்சனை வரும். அப்படி வர்ற பிரச்சனையினால அவங்க வாழ்க்கையே மாறி போயிடுது. அவங்களால விளையாட்டுல கவனம் செலுத்த முடியாம போயிடுது. அப்படி தவறுதலா தடம் மாறி போயிடக்கூடாதுனு இந்த படம் சொல்லும்.
நீங்க எதார்த்த படங்களும் கொடுத்திருக்கீங்க. கமர்சியல் படமும் கொடுத்திருக்கீங்க. எந்த மாதிரியான படங்கள் எடுக்க உங்களுக்கு பிடிச்சிருக்கு?
ஒரு படம் எடுத்ததுக்கபுறம் பொருளாதார ரீதியா நாம வலிமையா இருக்க கமர்சியல் படம் எடுப்போம். அப்படி கமர்சியல் படம் எவ்வளவு தான் சம்பாரிச்சு கொடுத்தாலும் எதார்த்த படங்களுக்கு கிடைக்குற பாராட்டு கிடக்கறது இல்ல. என்ன பொறுத்த வரைக்கும் அழகர் சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர் போன்ற படங்கள் மனநிறைவை கொடுக்குது. அப்படிப்பட்ட படங்கள எடுக்கனும்னு தான் ஆசப்படறேன். உதாரணத்துக்கு அஜித் சார் நிறைய கமர்சியல் படம் நடிச்சிருப்பாரு ஆனா நேர்கொண்ட பார்வை படம் தான் அவருக்கு மன நிறைவை கொடுத்திருக்கும்.
சினிமாவுக்கு வரணும்னு நினைச்சப்போ உங்க குடும்பத்துல என்ன சொன்னாங்க?
எங்க சித்தப்பா சினிமாவுல 15 வருஷமா முயற்சி செஞ்சி இப்போதான் வெண்ணிலா கபடிக் குழு 2 வெற்றிப் படம் கொடுத்திருக்கா. அப்போ நான் சினிமாவுல சேரணும்னு சொல்லும் போது எல்லாரும் ரொம்ப பயந்தாங்க. எங்க அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நான் எதாவது கேட்டுட்டன்னா மறுத்து பேச மாட்டார். அப்பா என்ன கூப்பிட்டு அறிவுரை சொல்லி சினிமாவுக்கு அனுப்சி வச்சாங்க. நான் சினிமாவுல எவ்ளோ கஷ்டப் பட்டாலும் இப்போ ஒரு நல்ல நிலமையில இருக்கேன்.
இந்த படத்திற்கு அப்பறம் நீங்க திரும்பவும் ஸ்போர்ட்ஸ் படம் பண்ணுவீங்களா?
நிச்சயமா பண்ணுவேன். ஸ்போர்ட்ஸ் படம் பன்னும் போதுதான் நமக்குள்ள ஒரு உற்சாகமே வருது. அப்போதான் நாம இளமையா இருக்குற மாதிரி உணர்றோம். இந்த மாதிரி படங்கள் பண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பிடிச்ச விஷயங்கள திரும்ப திரும்ப பண்றதுல தப்பே கிடையாது.
தொடர்ச்சியா படங்கள் பண்ணிகிட்டே இருக்கீங்களே அது எப்படி சாத்தியமாகுது?
எனக்கு கிடைச்ச டீம் அப்படி. சரியான ஸ்கிரிப்ட் டீம் கிடைச்சதுன்னா நாம எத்தன படங்கள் வேணாலும் பண்ணலாம்.
என்றார் டைரக்டர் சுசீந்திரன்.
