
அஜித்தின் 61வது படம் ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூல் செய்தது. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். போனி கபூர் தான் தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க வினோத்தின் கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ள கதையை அடிப்படையாக கொண்டது. கார் ரேசர் மற்றும் போலீஸ் அதிகாரியாக அஜித் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான தல 61 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டமான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்து அஜித் பாராட்டியதாகவும், அதில் நடிக்க ஒகே சொல்லியிருப்பதகாவும் தெரிகிறது. ஆர்டிகல் 15 படத்தின் காப்பிரைட் உரிமையும் போனி கபூர் வசம் தான் உள்ளது. எனவே தல 61 தயாரிப்பாளர் அவர் என பேசப்படுகிறது.

இதற்கிடையே தல 61 குறித்து மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. அஜித்தின் குட்புக்கில் இடம் பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் தான் தல 61 படத்தின் இயக்குனர் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் அஜித்தை சந்தித்து விஷ்ணு கதை சொன்னதாகவும், அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாகவும் தெரிகிறது.
எனவே அந்த கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குனர் விஷ்ணுவர்தன் பிஸியாக இருக்கிறார் என்ற பேச்சும் உள்ளது. அஜித்தை பொறுத்தவரை ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க மாட்டார். ஆதலால் வினோத் இயக்கும் படத்தில் நடித்து முடித்த பிறகு தான் அடுத்த படம் குறித்து அஜித் முடிவெடுப்பார் என்றும் தெரிகிறது.
