
2015-ம் ஆண்டு ரிலீஸான ‘டார்லிங்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சாம் ஆண்டன். ஜீ.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, கருணாஸ், பால சரவணன், சிருஷ்டி டாங்கே, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். ஹாரர் காமெடிப் படமான இது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து மறுபடியும் ஜீ.வி.பிரகாஷை வைத்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தை இயக்கினார் சாம் ஆண்டன். ‘கயல்’ ஆனந்தி, சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், சார்லி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், நிரோஷா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்தனர். ஆனால், இது சரியாகப் போகவில்லை.
இந்நிலையில், அதர்வாவை வைத்து தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார் சாம் ஆண்டன். இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். யோகிபாபு, ‘எரும சாணி’ ஹரிஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஆரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தில், போலீஸாக நடிக்கிறார் அதர்வா. பொதுவாக, போலீஸ் என்றாலே அவர்கள் கையில் துப்பாக்கி இருக்கும். ஆனால், துப்பாக்கி இல்லாமல் இருக்கும் போலீஸைப் பற்றிய கதைதான் இது. அதாவது, அவசர போலீஸைத் தொடர்புகொள்ள 100 என்ற எண் கொடுக்கப்பட்டிருக்கிறது இல்லையா? அந்த போன்களை அட்டெண்ட் செய்யும் கால் சென்டரில் பணிபுரியும் போலீஸைப் பற்றிய கதைதான் இது. எனவே, படத்துக்கு ‘100’ என்றே தலைப்பு வைத்துள்ளனர்.
