மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு, காதலும் கலாட்டாக்களுமாக பாண்டியும் சகாக்களும் படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அப்பு கே சாமி.
இசை சிகிச்சை என்கிற தலைப்பில் பி.எச்.டி படித்துக் கொண்டிருக்கும் ஜீன் இசையில் உருவான ‘பாண்டியும் சகாக்களும்’ படப்பாடல்களும் மற்றும் படத்தின் டிரையலரும் இன்று வெளியிடப்பட்டன. இந்த விழாவில் மூத்த இயக்குநர்கள் அதியமான், மனோஜ்குமார், நடிகர் பவர் ஸ்டார், ஆச்சி மசாலா நிறுவனர் ஐசக், பீ.ஆர்.ஓ யூனியன் செயலாளர் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இயக்குனர் மனோஜ்குமார் பேசும் போது, “முதலமைச்சர் கவனத்திற்கு அனுப்பவேண்டிய நான் இயக்கிய பாடல் ஒன்றிற்கு குறுகிய காலத்தில் டி.ஐ பண்ணிக்கொடுத்தவர் இயக்குநர் அப்பு கே சாமி. மிகவும் திறமைசாலி. நிச்சயம் இந்தப்படத்தை தயாரிப்பாளர்களுக்கு லாபம் வரும் அளவில் இயக்கியிருப்பார். ஜீனின் இசையும் அற்புதம்..” என்று வாழ்த்தினார். ஒரு வாரத்திற்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட இயக்கு நர் மனோஜ் குமார் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த நிலையிலும், சிறிய படங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் ஜீன் பேசும் போது, “அரங்கில் அமர்ந்திருப்பவர்களைச் சுற்றி சுற்றி ஒலிக்கும் இன்றைய நவீன இசைகளால், உண்மையில் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவது ரசிகர்களே… இது குறித்து 10 வருடங்களுக்கு முன்பே இளையராஜா எச்சரித்திருக்கிறார்… நான் எனது இசையை 5.1 ஸ்டிரியோவாகத்தான் கொடுக்கப்போகிறேன்… இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இது குறித்து யோசித்து நல்ல முடிவு எடுக்கவேண்டும்… இசை இனிமையானதாக இருந்து ரசிகர்களுக்கு சுகமான அனுபவம் கொடுக்கவேண்டுமே ஒழிய ரசிகர்களுக்கு தீங்கவிளைவிக்கக் கூடியதாய் இருக்கக் கூடாது..” என்று பேசினார்.
ஆச்சி மசாலா ஐசக் பேசும் போது, “எங்களது தாத்தா ஆப்ரகாம் பண்டிதர் 150 வருடங்களுக்கு முன்பே இசையைப்பற்றிய ஆராய்ச்சி செய்து, புத்தகம் வெளியிட்டிருப்பதும், இன்னும் அவரது ஆராய்ச்சிகள் புத்தகமாக வெளிவர இருப்பதும் அறிந்து மகிழ்ச்சி… அதனைப் படிப்பவர்கள் யாராக இருந்தாலும் இசையமைத்து விடலாம் என்று இசையமைப்பாளர் ஜீன் சொல்லும் போது நிஜமாகவே பெருமையாக இருக்கின்றது.” என்றார். மேலும், “பாண்டியும் சகாக்களும் படம் பல தரப்பினரையும் திருப்தி படத்தும் சரியான மசாலாப்படம் என்று குறிப்பால் உணர்த்துவதற்காகத்தான் எங்களை அழைத்தார்களோ..” என்றும் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும் போது, “ என்னைப்பற்றியும் நிறைய வதந்திகள்… ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சினிமாவில் முன்னேறிக்கொண்டே இருப்பேன்… கலைத்தாய் என்னை தத்தெடுத்துக்கொண்டிருக்கிறாள்… ஒரு பாட்டுக்கு நடனமாட அழைத்தார்கள் நான் என்ன சிலுக்கா..? என்று கேட்டேன்… ஆனாலும், நான் ஆடினால் படம் ஓடும் என்று நம்பி வருகிறார்கள், அவர்கள் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை….” என்றார்.
ஃபேஸ் டூ ஃபேஸ் நிறுவனம் சார்பாக கே முருகேசன் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை 1970 களில் ஹாலிவுட் சினிமாக்களில் மட்டுமே கையாளப்பட்ட மேஜிக் ரியாலிசம் முறையில் இயக்கியிருப்பதன் மூலம், அந்த வகை படத்தை முதன்முதலாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் இயக்கு நர் அப்பு கே சாமி. படத்தைப் பற்றி மேலும் கூறிய அவர், “ பரபரப்பான பல சம்பவங்களின் ஒருங்கிணைப்பாக இந்தப்படம் இருக்கும்… மேலும், படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்குமாறு பார்த்து கொண்டோம்.. இந்தப்படத்தில் சமூகத்திற்குத் தேவையான ஒரு நல்ல விழிப்புணர்வு செய்தியும்கொடுக்கப்பட்டுள்ளது…” என்றார்.