
ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி செளந்தரராஜன் இயக்கிய இந்தப் படம், ‘இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்’ என்று கூறப்பட்டது. நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வும் நடித்தார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ‘அடங்கமறு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அறிமுக இயக்குநரான கார்த்திக் தங்கவேல் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இதில், ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
இந்நிலையில், 2015-ம் ஆண்டு வெளியான ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது என அறிவித்துள்ளார் இயக்குநர் மோகன் ராஜா. எனவே, ‘அடங்க மறு’ படத்துக்குப் பிறகு ‘தனி ஒருவன் 2’வில் நடிக்கப் போகிறார் ஜெயம் ரவி என்ற கருத்து நிலவியது.
ஆனால், ‘தனி ஒருவன் 2’ படத்துக்கு முன்னர், அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப் போகிறார். இருவருமே நீண்ட வருடங்களாக சினிமாவில் இருந்தாலும், இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.
