Monday, May 20
Shadow

கதிர் திரை விமர்சனம் (4/5)

தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெங்கடேஷ் அப்பாத்துரை நடிப்பில் உருவாக்கியுள்ள கதிர் படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.

இன்ஜினியரிங் படித்துவிட்டு ஊரில் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ வெங்கடேஷ் சென்னையில் தனது நண்பர் ரூமில் தங்கி வேலை தேடுகிறார். ஆங்கிலத்தில் தடுமாறும் இவர் வேலை கிடைக்காமல், தண்ணியடித்துவிட்டு சுற்றித் திரிகிறார். பின்பு இவர் தங்கி இருக்கும் வீட்டு ஓனர் ஆக வரும் ரஜினி சாண்டி ஹீரோவிற்கு புத்திமதி சொல்லி திருத்துகிறார். பின்பு ஹீரோ வெங்கடேஷ்க்கு வேலை கிடைத்ததா? அடுத்து அவர் என்ன செய்தார்? என்பதே கதிர் படத்தின் ஒன்லைன்.

தற்போது இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றித்திரியும் பல இளைஞர்கள் ஹீரோ கதாபாத்திரத்துடன் தங்களை ஒன்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு அவர் செய்யும் செயல்கள் அவ்வளவு எதார்த்தமாக உள்ளது. ஹீரோவின் நண்பர்களாக வரும் ஒவ்வொரு வரும் சிறப்பாகவே நடித்துள்ளனர். குறிப்பாக காலேஜில் நடக்கும் ஒவ்வொரு காட்சிகளுமே ரசிக்கும்படியாக உள்ளது, பல இடங்களில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது. ஹீரோ வெங்கடேஷ்க்கு அடுத்து படத்தை தாங்கி பிடிப்பவர் ரஜினி சாண்டி தான். தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் அந்த கதாபாத்திரத்தில் நம்மை அறியாமல் ரசிக்க வைக்கிறார். நம்மளுக்கு இப்படி ஒரு ஹவுஸ் ஓனர் இல்லையே என்ற ஏக்கம் வரும் அளவிற்க்கு நடித்து இருக்கிறார் ரஜினி. கதாநாயகியாக வரும் பாவ்ய ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார்.

இரண்டாம் பாதியில் சிறிது நேரமே வந்தாலும் படம் முடிந்தும் சந்தோஷ் பிரதாப் நினைவில் நிற்கிறார். அப்படி ஒரு பவர்புல்லான பெர்பாமன்ஸை அந்த கதாபாத்திரத்தில் கொடுத்துள்ளார். அந்த 20 நிமிடங்களை மட்டுமே தனியாக ஒரு படமாக எடுக்கலாம். விவசாயிகளுக்கு நல்லது செய்கிறேன் என்று படம் எடுத்து மக்களை பாடாய் படுத்தும் இயக்குனர்களுக்கு மத்தியில், அதே விவசாயத்தை வைத்து புதுவிதமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் தினேஷ் பழனிவேல். குறிப்பாக ஆட் பிலிம் எடுக்கும் காட்சிகள் பிரமாதம்.

படத்தின் பிளஸ்:
ஹீரோ வெங்கடேஷ், ரஜினி சாண்டி ஆகியோர் நடிப்பு

படத்தின் மைன்ஸ்:
பெரிய நடிகர்கள் இல்லாதது மட்டுமே கதிர் படத்தின் பெரிய மைனஸ்.

மொத்தத்தில் ஜாலியாக படம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் கதிர்.