ஹரியின் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள சாமி 2 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில்மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஷிபு தமீன், தேவி ஸ்ரீபிரசாத், டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, , சூரி, ரமேஷ்கண்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நகைச்சுவை நடிகர் சூரி பேசும்போது, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், பாதி நேரம் ஜிம்மிலும் பாதி நேரம் ஸ்டுடியோவிலும் இருக்கிறார். விரைவில் கதாநாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கிறேன் எனக் கூறினார்.
சினிமாவில் வொயிடு ஷாட், க்ளோஸ் ஷாட் என்பதுபோல ஹரி ஷாட் என்று எல்லோராலும் பேசுகிறார்கள் என்றும் அதற்குக் காரணம் இயக்குனர் ஹரியின் பரபரப்பு தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல் இந்தி நடிகர்களிடமும் தொற்றிக்கொண்டதை பார்த்தாக சூரி குறிப்பிட்டார். நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி பேசும்போது, ” அண்ணா இந்த இடத்தில் இந்த பஞ்ச் வைங்க அண்ணா” என்று சொல்லுமளவிற்கு வளர்ந்துவிட்டார் என சூரி பாராட்டினார்.
இப்படத்தைப் பற்றி பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் ஹரியுடன் பணியாற்றும்போது நேரம் குறித்த திட்டமிடல் பற்றி எளிதாக தெரிந்துகொள்ளலாம் எனக் கூறினார். சிறு வயதில் அன்னியன் படத்தின் போஸ்டரை தன்னுடைய அறையில் ஒட்டிவைத்து, அந்த படத்தில் வரும் ரெமோவை ரசித்ததாகவும், தற்போது அந்த ரெமோவுடன் இணைந்து நடித்திருப்பதாகவும் தெரிவித்தார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து கீர்த்தி சுரேஷும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். தயாரிப்பாளர் ஷிபு கீர்த்தியின் குரலைக்கேட்டு தேவி ஸ்ரீபிரசாத்திடம் பரிந்துரை செய்த பிறகு, கீர்த்தியின் குரலைக் கேட்டு வியந்த தேவி ஸ்ரீபிரசாத் கீர்த்தியை பாடவைக்க முடிவுசெய்துள்ளார்.