Wednesday, January 19
Shadow

குட்டி ஸ்டோரி – திரைவிமர்சனம் (Rank 3.5/5)

நான்கு வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி திரையரங்குகளில் வெளியாகும் முதல் ஆந்தாலஜி படமாக வந்துள்ளது குட்டி ஸ்டோரி. இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், ஏஎல்.விஜய், நலன் குமாரசாமி, வெங்கட் பிரபு ஆகியோர் இந்த படங்களை இயக்கியுள்ளனர். நான்கு கதைகளை கொண்ட இந்த படத்தில் முதல் கதை எதிர்பாரா முத்தம்.ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக கடைசி வரை இருக்க முடியுமா முடியாதா என்பதை தனது ட்ரேட்மார்க் கதையில் சொல்லியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். தனது கல்லூரி பருவத்தில் ஆதி ஒரு பெண்ணை காதலிக்கிறார் ஆனால் மிருனாலினியுடன் நட்புடன் பழகுகிறார். அவளும் இவனிடம் நட்புடன் பழகுகிறாள். இந்நிலையில் ஆதி அவளை தனது வீட்டுக்கு அழைத்து உணவு சமைத்து பரிமாறுகிறான். அப்போது அவளுக்கு முத்தம் கொடுக்கிறான். பிறகு தனது காதலியை பிரிந்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.

மிருனாலினிக்கும் திருமணம் நடைபெறுகிறது. பல வருடங்கள் கழித்து ஆதியை சந்திக்கும் மிருனாலினி ஒரு உண்மையை சொல்கிறாள். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே கதை. ஒரு ஆணும் பெண்ணும் கடைசிவரை நண்பர்களாக இருக்க முடியுமா முடியாதா என்பதை தனது ஸ்டைலில் சொல்லியுள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். ஆனால் அதில் புதிதாக ஒன்றும்இல்லை. அடுத்த கதை அவனும் நானும் . மேகா ஆகாஷும் அமிர்தாஷ் பிரதானும் காதலர்கள். கல்லூரி படிக்கும்போதே ஏற்படும் காதலில் கர்ப்பம் ஆகிறாள் பிரீத்தி. இதை தனது காதலனிடம் சொல்கிறார். அதன்பிறகு அவனது போன் எண் துண்டிக்கப்படுகிறது. இதனால் மனமுடைந்த பீரீத்தி கருவை கலைக்க முற்படுகிறார்.

மருத்துவமனையில் கிடைத்த திடீர் அதிர்ச்சி தகவலால் மனம் மாறி குழந்தையை பெற்றெடுக்கிறாள். இதற்கு என்ன காரணம் என கதையின் முடிவில் விடை கிடைக்கிறது. அரவிந்த் கிருஷ்ணன் ஒளிப்பதிவு, மதுவின் இசை, ஆன்டணியின் இசை எல்லாம் ஓகே. ஆனால் கதை. பழமையான கதையால் பலவீனம் அடைகிறது.

மேகா ஆகாஷின் நடிப்பு அருமை. தோழியாக வரும் ஆரியாவின் நடிப்பும் நன்றாக உள்ளது. நான்கு கதைகளுக்கும் காதல்தான் மையக்கரு என்றாலும் இக்கதை கவலைக்கிடம். அடுத்தது வெங்கட் பிரபுவின் லோகம். வீடியோ கேமை மையப்படுத்தி அதில் வரும் காதலை பேசுகிறது படம். திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் இக்கதை நன்றாக இருந்தாலும் நவீன காதலில் பழமையான கேன்ஸர் வியாதியை நுழைத்தது எல்லாம் ஏற்றுக்கொள்ளும்விதத்தில் இல்லை. கடைசியாக வருவது நலன் குமாரசாமியின் ஆடல்பாடல். விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் இருவரும் தம்பதியர். தன் கணவரின் மற்றொரு பெண்ணுடனான தவறான உறவை கண்டறிகிறார் மனைவி. தானும் அதே போன்று ஒரு தவறை செய்துள்ளதாக கூறுகிறார் மனைவி. இதற்கு பிறகு என்ன ஆனது என்பதை அழுத்தமாகவும் அற்புதமாகவும் சொல்லியுள்ளார் நலன் குமாரசாமி. இந்த நான்கு கதைகளில் முதலிடம் பிடிப்பது இவர்தான். ஆணின் ஆணாதிக்க மனநிலைக்கு பலத்த செருப்படி கொடுத்துள்ளார்.

விரைவில் இந்த கதை முழுநீள திரைப்படமாக வரும் என்பதில் ஐயமில்லை.ஹெட்வினின் இசை பிரமாதம். சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவும் அருமை. ஆணின் இயலாமை, கோவம், ஆதங்கத்தை மிக சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார் விஜய் சேதுபதி. அதிதிபாலனும் தனது பங்கிற்கு அருமையாக நடித்துள்ளார்.

CLOSE
CLOSE