பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ வெளியாகும் என்று எப்போதோ அறிவித்தார்கள். ஆனால், அதே தினத்தில் ‘பேட்ட’ படமும் வெளிவரும் என அவர்களும் அறிவித்தார்கள். பின்னர் சிம்பு படமான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘எல்கேஜி’ ஆகிய படங்களும் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டன.
துவக்கி வைத்த டிச.,21
2019ல் ஆரம்பமாகப் போகும் அந்த பொங்கல் போட்டியின் முன்னோட்டமாக 2018 டிசம்பர் 21 அமைய உள்ளது. அன்றைய தினத்தில் “மாரி 2, அடங்க மறு, கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம்” ஆகிய படங்களும் 20ம் தேதி ‘சீதக்காதி’ படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. 

உடன்பாடில்லை
ஒரே சமயத்தில் இத்தனை பெரிய படங்கள் மோதுவதைத் தவிர்க்க தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கூட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் காரசார விவாதமும் நடந்தது. ஆனால், யாருமே அவர்களது வெளியீட்டுத் தேதியை மாற்றி வைக்க சம்மதிக்கவில்லை. அதனால், தயாரிப்பாளர் சங்கம் கிறிஸ்துமல், பொங்கல் பண்டிகையில் தயாரிப்பாளர்கள் அவரவர் விருப்பப்படி படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என அறிவித்தது. 

இனி கடும் நடவடிக்கை
2019 பொங்கலுக்குள் அனைத்து சங்கங்களும் இடம் பெறும் ஒரு கூட்டத்தை தயாரிப்பாளர் சங்கம் நடத்த உள்ளதாம். பொங்கலுக்குப் பிறகு வெளியாக உள்ள படங்களை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி நடந்து கொள்ளாத தயாரிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

ஈகோ மோதல்?
கிறிஸ்துமஸ், பொங்கல் படங்களுக்குள் ஏன் இப்படி தவிர்க்க முடியாத போட்டி என திரையுலகத்தில் விசாரித்த போது அது ஹீரோக்களுக்குள் இருக்கும் ‘ஈகோ’ மோதல் என்று சொல்கிறார்கள். ‘மாரி 2’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ‘கனா’ படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், ‘அடங்க மறு’ படத்தின் தயாரிப்பாளர் ஜெயம் ரவியின் மனைவி குடும்பத்தினர், ஹீரோக்களே அவர்களது படங்களின் தயாரிப்பாளர்களாக இருப்பதால் ஒருவரும் விட்டுக் கொடுக்க மறுக்கிறார்களாம். மேலும், பொங்கலுக்கு வெளிவரும் படங்களில் ரஜினிகாந்த், அஜித், சிம்பு ஆகியோரும் அந்த ‘ஈகோ’வால்தான் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்கிறார்கள்.

தற்போது இந்த வெளியீட்டுக்களுக்காக தியேட்டர்களைப் பிடிக்க கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாம். தமிழ் சினிமாவை தலை கவிழ வைக்க வேறு யாரும் வரத் தேவையில்லை, இவர்களே போதும் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சில திரையுலக மூத்தவர்கள் முணுமுணுக்கிறார்கள். 

Related