
இந்தி(ய) இசையுலகின் இசைப் புயல் மெலடி கிங், பல்லாயிரக் கணக்கான இசை ரசிகர்களின் இதய தெய்வம் ஆர் டி பர்மன் பிறந்த நாள் இன்று.
ராகுல் தேவ் பர்மன். பெயர் சொல்லும் போதே அதிர்கிறது. பலப்பல பாடல்கள் மனதில் ஆக்கிரமிக்கின்றன. இதைச் சொல்லலாம், அதைச் சொல்லலாம் என்று வரிசை கட்டி நிற்கின்றன.
Pancham போன பிறகு இனிய பாடல்களுக்கு பஞ்சம் இந்தித் திரையுலகினரால் செல்லமாக பன்ச்சம்தா என்று செல்லமாக அழைக்கப் படும் ஆர் டி பி தனது ஒன்பதாவது வயதில் Funtoosh படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்து சாதனை செய்தார் என்பது ஆச்சர்யப் பட வைத்த செய்தி.
தனது கடைசிக் காலத்தில் உடல் நலம் ஒத்துழைக்க மறுத்ததால் தந்தை எஸ் டி பர்மன் ஒப்புக் கொண்ட பல படங்களுக்கு ஆர் டி பர்மன் முடித்துக் கொடுத்தார் என்று சொல்வார்கள். அந்த வகையில் ஆராதனா, கைட் போன்ற படங்களைச் சொல்லலாம்.

பூத் பங்களா என்ற படத்தில் மெஹம்மூத்துடன் இணைந்து நடித்திருக்கிறார். அதே மெஹ்மூத்துக்கு லாக்கொமே ஏக் படத்தில் கிஷோர் குரலில் ‘சந்தா ஓ சந்தா’ என்ற அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார்.
கிஷோர் குமார் குரல் ஆர் டி பர்மனுக்காகவே படைக்கப் பட்டது போலும் என்பது போல இருவரின் காம்பினேஷனில் பற்பல இணையற்ற பாடல்கள்.அஜ்நபி, ஆந்தி, கேல் கேல் மெய்ன், ஆப் கி கசம், அமர் பிரேம், ஜவானி திவானி, ஆ கலே லக் ஜா, வாரன்ட், எத்தனை படங்களில் எத்தனை பாடல்கள்…

ஷோலே படத்தில் ஆர் டி பரமனே பாடிய ‘மெஹ்பூபா…மெஹ்பூபா ‘பாடலை முதலில் கிஷோரை பாடச் சொல்லி அவர் மறுத்த பின் இவரே பாடியுள்ளார்.
கேரவான் இன்னொரு அற்புதமான பாடல்களைக் கொண்ட படம்.
டிஸ்கோ பைத்தியம் தொடங்கிய எண்பதுகளின் பிற்பகுதியில் ஆர் டி பி மறக்கப் பட்டதும், ஒதுக்கப் பட்டதும் சோகங்கள். அவர் ஒரு பெரிய ஹிட்டுடன் மீண்ட 1942 a love story அவர் கடைசிப் படமானதும் சோகம்.
இவரது தந்தை சச்சின் தேவ் பர்மன் ஒரு திரைப்பட இசையமைப்பாளர். ஆர். டி. பர்மனின் இரண்டாவது மனைவி திரைப்படப் பாடகி ஆஷா போஸ்லே.
