
இவர் இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார். தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கியவர்.
முரளிகிருஷ்ணா கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில் பிறந்தார். இசைக் கலைஞர்களான பட்டாபிராமையா – சூர்யகாந்தம்மா ஆகியோர் இவரது பெற்றோராவர். இவரது தந்தை பட்டாபிராமையா ஒரு புல்லாங்குழல் வித்வான். தாயார் வீணை வாசிப்பார். இவரது தாத்தா கூட ஒரு இசைக்கலைஞர்தான்.
தியாகராஜரின் மாணவர் பரம்பரையில் 4ஆவதாக வந்தவர் எனும் பெருமை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு உண்டு. தியாகராஜரின் நேரடி மாணவர், மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர். அவரிடமிருந்து தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு என பரம்பரை தொடர்ந்தது. பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலுவிடம் பாலமுரளிகிருஷ்ணா முறையாக கருநாடக இசை கற்றார்.
முரளிகிருஷ்ணா முதன்முதலாகத் தனது ஒன்பதாவது வயதில் இசைக்கச்சேரி செய்தார். தனது சிறு வயதிலேயே இசை மேதை எனப் பெயர் பெற்றார். ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி இவருக்கு பால என்ற பெயரை சேர்த்து அழைத்ததன் பின்னர் பாலமுரளிகிருஷ்ணா என அழைக்கப்பட்டார். சென்னை அனைத்திந்திய வானொலி, இவர் ஒரு குழந்தைக் கலைஞராக இருந்தபோதே தனது முதல்தர இசைக் கலைஞர் பட்டியலில் (A Grade) இவரையும் சேர்த்தது.
திருவையாறு தியாகராஜ சுவாமி உற்சவத்தில் தனது பதினோராவது வயதிலேயே ஒன்றரை மணி நேரம் பாடியிருக்கிறார். இவருக்காக பெரிய இசை வித்வான்களாகிய பெங்களூர் நாகரத்தினம்மாள், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர் தங்கள் நேரத்தை விட்டுக் கொடுத்தார்கள்.
தனது வாழ்நாளில் ஏறத்தாழ 25,000 கச்சேரிகளை உலகம் முழுவதும் நிகழ்த்தினார்.
தூர்தர்சன் தொலைக்காட்சியின் புகழ்மிக்க காணொளிப் பாடலான மிலே சுர் மேரா தும்ஹாரா எனும் பாடலில் பாலமுரளிகிருஷ்ணா பங்களித்தார். இந்த தேசபக்திப் பாடலில், தமிழ்ப் பாடல் வரிகளை இவர் பாடினார்.
அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகிய முன்னணிக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருந்தார்.
பாலமுரளிகிருஷ்ணா தனது தந்தை வயலின் வாசிப்பதை கவனித்து வந்து வயலின் வாசிப்பினை கற்றுக் கொண்டவர். தனது இளம்பிராய வயதில், குரல் மாறி பாடுவதற்கு கடினமாக இருந்த காலத்தில் அதிகளவு வயலின் வாசித்து நன்கு கற்றுக் கொண்டார்.
வயோலா, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் எனும் வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவராகவும் இருந்தார்.
இவர் 72 மேளகர்த்தா உருப்படிகள் உருவாக்கம் செய்திருக்கிறார். மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.
சுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள்), மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்று ), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே போன்ற ராகங்களை உருவாக்கினார்.
ஒரு பின்னணிப் பாடகராக தென்னிந்தியத் திரைப்படங்களில் பங்களித்தார். சதி சாவித்திரி எனும் தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாக பாடினார். பின்னணிப் பாடகி பி. லீலா இவருடன் இணைந்து பல பாடல்களை பாடியிருக்கிறார்.
சுவாதித் திருநாள் எனும் மலையாளத் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்களுக்காக, கேரள அரசின் விருது இவருக்குக் கிடைத்தது.
