Tuesday, November 5
Shadow

*குடியைப் பழக்கிவிடும் சினிமாக்காரர்கள் : ஓர் இசையமைப்பாளரின் ஆதங்க பேச்சு!

*திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி!
*குடியைப் பழக்கிவிடும் சினிமாக்காரர்கள் : ஓர் இசையமைப்பாளரின் ஆதங்க பேச்சு!
அண்மையில் மறைந்த திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சியை திரைப்படப் பாடல்களை எழுதப் பயிற்சி தரும் நிலையமான ‘தமிழ்த் திரைப்பாக்கூடம்’ இன்று உணர்வுபூர்வமாக நடத்தியது..

நிகழ்வில் இசையமைப்பாளர் ,நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் வேலு பிரபாகரன், ஜி.என்.ஆர்.குமாரவேலன், , பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் மு.பி.பாலசுப்பிரமணியன், பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர்,. இசையமைப்பாளர்கள் தினா, காந்திதாசன், DSR.சுபாஷ் (தமிழ் நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைவர்), மக்கள் தொலைக்காட்சி பாஸ்கர்,பாடலாசிரியர்கள் ப்ரியன் ,கிருதியா , சீர்காழி சிற்பி,கட்டளை ஜெயா, பத்திரிகையாளர் ரியாஸ், ஒலிப்பதிவாளர் சத்யா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் பாடலாசிரியர் ப்ரியன் தன் நண்பர் அண்ணாமலை பற்றிய நட்பின் அறிமுகம் கொடுத்து தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வில் இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி பேசும் போது,

” அண்ணாமலையின் மறைவு நினைத்தால் எனக்கு இப்போதும் வருத்தமாக இருக்கிறது. நான் சவுண்ட் இன்ஜினியராக இருந்து இசையமைக்க வந்தவன். எனக்கு சினிமாவில் நிறைய பேர் பழக்கமில்லை. தெரிந்த சில பேரை மட்டும் வைத்துக கொண்டு தான் நான் சினிமாவில் செயல்பட்டு வருகிறேன். எனக்கு அண்ணாமலையும் ப்ரியனும் தான் பாட்டு எழுதி வருகிறார்கள். இவர்கள்தான் பத்து ஆண்டு காலம் பழக்கம, நட்பு உள்ளவர்கள்.

சமீபத்தில் ஒரு படத்துக்கு அண்ணாமலையின் ஒரு பாடலை பதிவு செய்த போது அடுத்த படத்தில் எல்லாப் பாடல்களையும் உங்களுக்குத் தருகிறேன் என்றேன். ஆனால் அதற்குள் மறைந்து விட்டார் .அண்ணாமலையின் மறைவு எனக்குப் பெரிதும் கவலையும் வருத்தமும் அளித்தது. நினைத்தால் இப்போதும் வருத்தமாக இருக்கிறது.” என்றார் வருத்தத்துடன் .
நிகழ்வில் இசையமைப்பாளர் தினா பேசும்போது,
“ஒரு மனிதனாக மிகவும் கஷ்டப்பட்டு இந்தச் சமுதாயத்தில் போராடி, தன் வரிகள் உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடம் சென்று சேரும் அளவுக்கு அண்ணாமலை உழைத்து முன்னேறி இருக்கிறார்.
ஆனால் இன்னும் எவ்வளவோ சாதிக்க இருக்கும் போது ‘ பால் பொங்கி வரும் போது பானை உடைவதைப் போல ‘ வளரும் போதே அவர் மறைந்து விட்டார்
அவர் மரணம் என்னை மிகவும் பாதித்தது. ‘தினா அண்ணா எப்படி இருக்கீங்க ?’ என்று கேட்பார். அதில் மரியாதையை விட அன்பு அதிகமாக இருக்கும்.
அடிக்கடி செல்போனில் கேட்கும் அந்தக் குரலை இனி கேட்க முடியாது. ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ என்று பாட்டு எழுதினார் .அவரிடம் அது பற்றி கேட்டேன், அது என்னய்யா ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ என்று? ‘அதாவது பச்சை மிளகாய் கடித்து விட்டால் மண்டையில் சுர்ருன்னு வருமில்லையா அது போலத்தான் அண்ணே ‘என்பார்.
எங்கள் சந்தங்களுக்கு உயிர், உறுப்புகள் எல்லாமுமாக இருப்பது வார்த்தைகள் தான். அதை எழுதுகிற கவிஞரும் இசையமைப்பாளரும் கணவன் மனைவியைப் போல புரிந்து கொண்டு,கணவன் மனைவியைப் போல உணர்ந்து ,கணவன் மனைவியைப் போல விட்டுக் கொடுத்து, கணவன் மனைவியைப் போல பகிர்ந்து கொள்ளும் பணியில் இருப்பவர்கள்.
இசையமைக்கப் படிப்பு பெரிதாக வேண்டாம். ஆனால் பாட்டு எழுத படித்திருக்க வேண்டும்.தமிழைப் படித்தவர்களால் மட்டுமே பாடல் எழுத முடியும்.
இவ்வளவு படித்து விட்டு எழுதுகிறவர்களின் இழப்பு கொடுமையானது. அதுவும் இளம் வயதில் இப்படி மறைவது மிகவும் கொடுமையானது. முத்துக்குமார் மரணம் நம்மை உலுக்கியது. அதிலிருந்து மீள்வதற்குள் அண்ணாமலை மறைவு . இதைக் கேள்விப்பட்ட போது முதலில் நான் இதை நம்பவே இல்லை. நல்லாத்தானே இருந்தார் என்றுகேட்டேன். அவ்வளவு அன்பாகப்பழகுபவர்.இன்னொரு பிறவி இருந்தால் அண்ணாமலை எனக்குத் தம்பியாகப் பிறக்க வேண்டும்.திறமைசாலிகள் ஏன் இப்படி மறைகிறார்கள்? என்று கேட்டால் , வருத்தமாக உள்ளது.

பொதுவாகவே சினிமாவில் நாம் வேலையில்லாமல் தயாராக இருக்கும் போது வாய்ப்பு தரமாட்டார்கள். வாய்ப்பு தரும் போது நேர அவகாசம் கொடுக்க மாட்டார்.கள் அவசரப்படுவார்கள். நெருக்குதல் தருவார்கள். சில நேரம் மிரட்டவும் செய்வார்கள்.

பகலில் 9 மணி முதல் இரவு 9 மணிவரை படப்பிடிப்பு முடித்து விட்டு வருவார்கள். நாளைக்குப் பாடல் காட்சிகள் எடுக்கவேண்டும் இன்றிரவே பாடல் கொடுங்கள் என்பார்கள். அப்படி அவர்கள் வரும் போது பகல் எல்லாம் வேலை பார்த்த களைப்பு என்று பாட்டிலைத் திறப்பார்கள் நமக்கும் கொடுப்பார்கள் அப்புறம் என்ன ஆகும்? எப்படியோ இரவே வேலை வாங்கி விட்டு சென்று விடுவார்கள்.

இரவுத்தூக்கம் கெட்டு குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி துன்பப்படும் போது எந்த தயாரிப்பாளரும் இயக்குநரும் வரமாட்டார்கள். உங்கள் உடம்பை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். அது தான் முக்கியம் அதன் பிறகு தான் தொழில்.” என்று வளரும் கவிஞர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

முன்னதாக அண்ணாமலையின் திருவுருவப் படத்தை விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

‘தமிழ்த் திரைப்பாக்கூடம்’ மாணவர்களின் மறைந்த அண்ணாமலை குறித்த நினைவேந்தல் கவிதாஞ்சலியும் நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வில் ‘தமிழ்த் திரைப்பாக்கூடம்’ மூலம் திரைப்படப் பாடல் எழுதும் பயிற்சி பெற்று முடித்திருந்த மாணவர்களுக்குப் பட்டயச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Leave a Reply