Monday, May 20
Shadow

மாமனிதன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள மாமனிதன் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

மனசாட்சிக்கு பயந்து ஒரு மனிதனாக வாழ முயற்சிக்கும் ஒவ்வொரு மனிதனும் மாமனிதன் தான் என்கிற ஒன் லைனை அழகாக படமாகவும் பாடமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

“அப்பன் தோத்த ஊர்ல.. புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்” என்கிற ஆழமான அழுத்தமான வசனத்தை விஜய்சேதுபதி சொல்லும் இடத்தில் தான் படத்தின் கதையே புரிகிறது. அப்படியொரு சூழலில் தனது பிள்ளையை ஜெயிக்க வைக்க தலை நிமிர்ந்து வாழ வைக்க தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி செய்யும் வேலைகள் தான் படத்தின் மையக் கரு. அதிகம் படிக்காத விஜய்சேதுபதி அந்த ஊரிலேயே முதல் முறையாக ஆட்டோ ஓட்டுநராக ஆகிறார். ஊரில் நல்ல மனிதன் என்கிற பெயரை எடுக்கும் விஜய்சேதுபதிக்கு தீராத களங்கம் ஒன்று ஏற்பட அதிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் மாமனிதன் படத்தின் கதை.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் அந்த பால் குடமே எப்படி விஷமாக மாறிவிடுகிறது என்பதை கதையின் போக்கிலேயே சொல்லி இருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. கத்தி, துப்பாக்கி, அடிதடி என சாமானிய மக்களின் வாழ்வில் அன்றாடம் நிகழாத எதார்த்தத்தை மிஞ்சிய சினிமாக்களே நம்மை பிரம்மிக்க வைக்கும் நிலையில், வாழ்வியலாக வந்து ரசிக்க வைத்துள்ளது விஜய்சேதுபதியின் மாமனிதன். நல்லவன்னு பெயர் எடுக்க நாளாகும் என சொல்வார்கள், இந்த படத்தில் விஜய்சேதுபதி எப்படி மக்களின் நம்பிக்கை பெறுகிறார் என்பதை காட்சியாக காட்ட அவரது ஆட்டோவில் பயணம் செய்யும் ஒருவரின் நகை ஆட்டோவிலேயே மிஸ் ஆகிவிடுகிறது. அதை தனது இஸ்லாமிய நண்பராக வரும் ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரத்துடன் சேர்ந்து கண்டு பிடித்து கொடுக்க ஹீரோயின் காயத்ரியின் கல்யாணத்திற்காக அவங்க அப்பா சேர்த்து வைத்த நகை தான் காணாமல் போனது என்பது தெரிய வருகிறது. ஆட்டோக்காரர்கள் நகையை திருப்பிக் கொடுத்தார்கள், பணத்தை திருப்பிக் கொடுத்தார்கள் என நாள்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ரஜினியின் பாட்ஷா படத்திலும் இதுபோல ஒரு காட்சி இருக்கும்.

காயத்ரிக்கு அவங்க அப்பா மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்து கொள்ளும் விஜய்சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் வருவது போல அவரும் அதற்கு உதவி செய்வது போல, தனது ஜாதகத்தையும் உள்ளே வைக்கிறார். காயத்ரியை ஒரு தலையாக காதலிக்க பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். குழந்தை குட்டி என சந்தோஷமாக செல்லும் குடும்பத்தில் திடீரென ஒரு சுனாமியாக ஒரு பிரச்சனை கிளம்புவதில் தான் மாமனிதன் படமே ஆரம்பிக்கிறது. வஞ்சகர் என தெரியாமல் தொழிலதிபர் ஒருவரது வலையில் சிக்கி தன்னுடைய பெயரையே கெடுத்துக் கொள்ளும் விஜய்சேதுபதி அந்த ஊரை விட்டும் தனது குடும்பத்தையும் விட்டு ஓடி ஒளிய வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது.

தொலைத்த இடத்தில் தானே இழந்த பொருளை தேட முடியும் என தன்னையும் ஊரையும் ஏமாற்றும் அந்த நபரை தேடி அலையும் ஹீரோ, குடும்பத்தை காப்பாற்ற சம்பாதித்து தனது இஸ்லாமிய நண்பரான குரு சோமசுந்தரத்தின் மூலம் பணம் அனுப்பி வைக்கிறார். ஒரு கட்டத்தில் ஏமாற்றியவரை கண்டுபிடிக்கும் இடத்தில் நடக்கும் ட்விஸ்ட், கர்மா இஸ் பூமராங் என்பதை சொல்கிறது. மனிதன் மனசாட்சிக்கு பயந்து வாழும் போது மாமனிதனாக மாறுகிறான் என்கிற பாடத்தைத் தான் இந்த படத்தின் மூலம் இயக்குநர் சீனு ராமசாமி சொல்ல முயன்றிருக்கிறார்.

படத்தின் பிளஸ்:
விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், மலையாள நடிகை ஜுவல் மேரி ஆகியோரின் நடிப்பு

படத்தின் மைன்ஸ்:
பாடல்களோ அல்லது பின்னணி இசையோ சொல்லிக் கொள்ளும்படி இல்லாதது

மொத்தத்தில் மாமனிதன் உயர்ந்த மனிதன் அனைவரும் நிச்சயம்  பார்க்கவேண்டிய படம்