
ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
கடந்த இரு நாட்களாக அலங்காநல்லூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் போராட்டமே நடக்கிறது. இதில் இசையமைப்பாளர்கள் ஆதி, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் இயக்குனர்கள் அமீர், ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் ஆரி, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி, ராகவா லாரன்ஸ் ஆகியோர் களத்தில் இறங்கியும் இன்னும் சில திரை பிரபலங்கள் ட்விட்டர் மூலமாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக வருகின்ற ஜனவரி 20-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உண்ணாவிரதம் மற்றும் மவுன போராட்டம் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரதத்தில் கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று நடிகர் சங்கம் உறுதியாக உள்ளது இதில் கலந்து கொள்ளவிட்டால் அந்த நடிகர்களுக்கு எந்த உதவியும் நடிகர் சங்கம் மூலம் பெற முடியாது அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு எந்த ஒத்துழைப்பும் இல்லை என்று முடிவு செய்துள்ளனர் .
