
சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. தலைவர் பதவிக்கு 5 பேர் மோதுகிறார்கள்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால் சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரனை தேர்தல் அதிகாரியாக நியமித்தது. மார்ச் 5-ந்தேதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ததை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் மீண்டும் தேர்தல் நடத்துவதில் தாமதம் எற்பட்டது. விஷால் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஏப்ரல் 2-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தலைவர் பதவிக்கு கேயார், டி.சிவா, ராதாகிருஷ்ணன், கலைப்புலி சேகரன், நடிகர் விஷால் ஆகிய 5 பேர் போட்டியிடுகிறார்கள்.
2 துணைத்தலைவர் பதவிகளுக்கு டைரக்டர்கள் கவுதம் மேனன், பவித்ரன், நடிகர் பிரகாஷ்ராஜ், ரங்கா ரெட்டி, ஏ.எம்.ரத்னம், கே.ராஜன், பி.டி.செல்வகுமார், சுரேஷ் காமாட்சி ஆகிய 8 பேரும்,
2 செயலாளர்கள் பதவிகளுக்கு ஏ.எல்.அழகப்பன், கே.ஈ.ஞானவேல் ராஜா, கதிரேசன், மன்னன், ஜே.சதீஷ்குமார், டைரக்டர் மிஷ்கின், சிவசக்தி பாண்டியன் ஆகிய 7 பேரும் போட்டியிடுகிறார்கள்.
பொருளாளர் பதவிக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜயமுரளி, எஸ்.ஆர்.பிரபு, பாபுகணேஷ் ஆகிய 4 பேர் போட்டியிடுகிறார்கள். 21 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடிகர்கள் பார்த்திபன், ஆர்யா, சங்கிலி முருகன், டைரக்டர்கள் வி.சி.குகநாதன், சுந்தர்.சி, பாண்டிராஜ், தயாரிப்பாளர்கள் கோவைதம்பி, அழகன் தமிழ்மணி, முரளிதரன் உள்பட 85 பேர் போட்டியிடுகிறார்கள்.
