Thursday, March 4
Shadow

செம திமிரு – திரைவிமர்சனம் (Rank 2.5/5)

செம திமிரு இது ஒரு கன்னடப்படம். கன்னடத்தில் பொகுரு என வெளியாகியுள்ளது. இதில் துருவா சர்ஜா, ராஷ்மிகா மந்தனா, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஆதி காலத்து கதைதான். ஹீரோவின் சிறுவயதில் அம்மா, அப்பா, பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். அவரது தந்தை ஒரு கற்பழிப்பு வழக்கில் சாட்சி சொல்ல போகும்போது வில்லன் கும்பலால் கொலை செய்யப்படுகிறார். இதனால் அவனது அம்மா மகனின் நன்மைக்காக இன்னொரு கல்யாணம் செய்துகொள்கிறார். அந்த அப்பா ஒரு அரசு ஊழியர் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஹீரோவை ஆசிரமத்தில் சேர்த்துவிடுகிறார்கள். தனது தந்தை வருவார் என்ற நம்பிக்கையில் ஹீரோ அங்கு வளருகிறார். பத்து வருடங்கள் கழித்து அவனது பாட்டி சாகும்தருவாயில் அப்பா இறந்துபோன உண்மையை சொல்லிவிட்டு உயிரிழக்கிறார். இதனால் ஹீரோ தனது அம்மாவை தன்னுடன் அழைத்து செல்ல தன்னுடைய புதிய அப்பா வீட்டுக்கு செல்கிறார். அங்கு இவனது நடவடிக்கையால் அம்மா அவனுடன் வர மறுக்கிறார். இதனால் ரவுடியாக வளரும் ஹீரோ ஊர் மக்களை கொடுமைப்படுத்தி அங்கேயே வளருகிறார்.வில்லனுடனேயே கூட்டு சேர்ந்து கொள்கிறார். அதே ஏரியாவில் இருக்கும் ஐயர் வீட்டுப்பெண்ணான ஹீரோயினை காதலிக்கிறார். இறுதியில் ஹீரோ திருந்தினாரா தந்தையை கொன்றவர்களை பழிவாங்கினாரா என்பதுதான் கதை.

ஹீரோவாக துருவா சர்ஜா. ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன்தான் இந்த துருவா. ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் நன்றாகவும் நடித்துள்ளார். அவரது உடல்பலத்தை காட்டும் மாஸ் காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா. ஒரு கமர்ஷியல் படத்தில் ஹீரோயினுக்கு என்ன வேலையோ அதை செய்துள்ளார். அம்மாவின் அன்புக்காக ஏங்குபவன் அம்மாவின் அன்பை புரிந்துகொள்ளாமல் ரவுடியாக வாழ்கிறான். இறுதியின் மனம்திருந்தினான் என்ற கதை தமிழ் சினிமாவின் துவைத்து தொங்கப்போட்ட ஒன்று. இதையே சற்று மாஸ் மசாலா கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் நந்தகிஷோர்.

நம்மூர் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கமர்ஷியல் படத்தை கலர்புல் ஆக்குகிறது. சந்தன் ஷெட்டியின் இசை படத்திற்கு பலம். மொத்தத்தில் செம திமிரு கமர்ஷியல் மசாலா.

CLOSE
CLOSE