
நடிகர் சிம்பு இரண்டு வாரத்திற்கு முன்னர், கட்-அவுட் வேண்டாம், பாலாபிஷேகம் செய்யாதீர்கள், பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்காதீர்கள், அம்மாவுக்கு புடவை எடுத்து கொடுங்கள், அப்பாவிற்கு வேஷ்டி எடுத்து கொடுங்கள் என தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார். சிம்புவின் பேச்சை பலரும் வரவேற்றனர்.
அடுத்த சில நாட்களிலேயே யாரோ ஒரு சிலர் கேலி செய்தார்கள் என்பதற்காக மாற்றி பேசினார் சிம்பு. அதாவது, பெரிய பெரிய கட்-அவுட் பேனர் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டா அண்டாவா ஊற்றுங்கள் என்றார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், சிம்புவுக்கு கட்-அவுட் வைத்து, தவறி விழுந்து இறந்த மதன், என்பவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல, அவரது இல்லத்திற்கு இன்று(ஜன.,28) சென்றார் சிம்பு.
பாலாபிஷேகம் வேண்டாம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது ரசிகர் இறந்ததால் மிகுந்த வேதனையில் இருந்தேன். அவன் இறந்த சமயத்தில் அப்பாவையும், நண்பர் மகத்தையும் அனுப்பி வைத்தேன். அவன் இறந்த பாதிப்பு எனக்குள் இருந்தது. அதனால் அப்போதே எழுமின் படத்தின் இசை வெளியீட்டிலேயே, பேனர், பாலாபிஷேகம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அது சரியாக மக்களிடம் போய் சேரவில்லை.
அண்டா அண்டாவா ஊற்றுங்கள்
அதனால் தான் படம் ரிலீஸின் போது சொன்னால் சேரும் என்று, பாலாபிஷேகம் செய்யாதீர்கள், பெற்றோருக்கு, புடவை, வேஷ்டி எடுத்து கொடுங்கள் என்றேன். அதுவும் சரியாக சேரவில்லை. ஒரு விஷயத்தை நெகட்டிவ்வாக கூறினால் தான் மக்களிடம் போய் சேரும் என்று நினைத்து, மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, பெரிய பேனர் வையுங்கள், கட்-அவுட் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டாவில் பாலை ஊற்றுங்கள், வேற லெவலில் செய்யுங்கள் என்றேன்.
மன்னிப்பு
தயவு செய்து அந்த வீடியோவை திருப்பி பாருங்கள். பாக்கெட்டில் உள்ள பாலை அண்டாவில் ஊற்றுங்கள் என்று தான் சொன்னேன். எனக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று சொல்லவில்லை. நான் மாற்றி பேசும் ஆள் கிடையாது. எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று தான் பேசுகிறேன். இதுதான் உண்மை. ஒருவேளை எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.
புதுவிளக்கம்
திரும்பவும் சொல்றேன். அண்டாவில் பாலை ஊற்றுங்கள். பாலை காய்ச்சி அண்டாவில் ஊற்றி, பேசவே முடியாது ஒரு கட்-அவுட்டிற்கு ஊற்றுவதற்கு பதிலாக வாய் உள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள். மனிதர்களுக்கு, கஷ்டப்படுகிற மக்களுக்கு கொடுங்கள்.
அன்பு போதும்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் சொன்னதை, மறப்பவன் நான் கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், எனக்கு கவலையில்லை. நல்லதை யார் சொன்னாலும் எடுத்து கொள்ளலாம். எது எப்படி என்றாலும் உண்மை ஜெயிக்கும். எனக்கு ரசிகர்களின் அன்பு போதும், வேறு எதுவும் வேண்டாம்.
