DIVA அமைப்பின் பொதுக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அரசு விருதுகள், அரசு உதவிகள் உள்ளிட்ட அங்கீகாரம் வேண்டும் – தமிழ்நாடு அரசு மற்றும் பெப்ஸி அமைப்பிடம் கோரிக்கை வைத்த DIVA அமைப்பு!
DIVA அமைப்புக்கு பெப்ஸியின் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு – பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேச்சு
திரைத்துறையில் DI (Digital Intermediase) மற்றும் Visual Effect தொழில் நுட்பமானது முக்கியமான பங்கினை வகிக்கிறது. இதில் பணிபுரியும் கலரிஸ்ட், விஷுவல் எபக்ட்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் எந்தவித அரசு விருதுகள், அரசு உதவிகள் போன்ற எந்த அங்கீகாரமும் இல்லாமல் இருந்து வருகின்றனர். திரைத்துறையிலும் முக்கியத்துவம் இல்லாமல் இருந்து வருகின்றனர்.
இந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இணைந்து DIVA (DI and VFX Association) என்ற அமைப்பு உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இதில் உள்ள உறுப்பினர்கள் நலனுக்காக தமிழ்நாடு அரசிடமும், பெப்ஸி சம்மேளனத்திடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், DIVA அமைப்பின் பொதுக்குழு கூட்டம், சென்னை பிரசாத் பிலிம் லேபரட்டரியில் இன்று (02.07.2023) .இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் நலனுக்கான திட்டங்கள் குறித்தும், அரசு மற்றும் திரைத்துறையில் உரிய அங்கீகாரம் வேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற DIVA அமைப்பின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பெப்ஸி சம்மேளனத்தின் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி, செயலாளர் திரு.சுவாமிநாதன், துணைத்தலைவர் திரு.தீனா, லைட்மேட் யூனியன் தலைவர் செந்தில்குமார், சிகா தலைவர் கார்த்திக் ராஜா, டெக்ரேஷன் யூனியன் செயலாளர் மோகன் உள்ளிட்ட பல சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக்கொண்டு DIVA உறுப்பினர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ““திவாவோட நிர்வாகிகள் அனைவருக்கும் நல்வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறோம். திவா இது ஒரு குழந்தையாக உருவாகியிருக்கிறது. பல்வேறு பரினாமங்களில் மாறி மாறி திவா என்ற அழகிய பெயரில் உருவாகியுள்ளது. இன்று அனைவரும் சந்தோஷமாக, ஒற்றுமையாக ஒரு அரங்கத்திற்குல் இருக்கிறீர்கள், இதுவே ஒரு வெற்றி. ஆரம்பம் நல்லா இருந்தால் முடிவும் நல்லா இருக்கும். இந்த தொடக்கம் எளிதாக வந்தது என்று நினைக்க வேண்டாம். இந்த தொடக்கம் ஐந்து வருடங்களாக பல போராட்டங்களை கடந்து இன்று நடைபெறுகிது. இப்போது புதிதாக இங்கு வந்தவர்களுக்கு இது பற்றி தெரியாது என்பதால் இதை சொல்கிறேன்.
கண்ணன், முத்து, ரகு ஆகியோர் ஒவ்வொரு முறையும் ஒரு கோரிக்கையோடு வருவார்கள். இன்று அவர்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஒற்றுமை அறிவோடும், அனுபவத்தோடும், சுமூகத்தோடும் தொடர வேண்டும். தொடங்குவது பெரிய விஷயம் தான் என்றாலும், அதை விட பெரிய விஷயம் அதை சுமூகத்தன்மையோடு தொடர்ந்து செயல்படுத்துவது தான். அதை எப்படி செய்ய வேண்டும் என்றால், விட்டுக்கொடுத்து போனால் தான் அதை செய்ய முடியும். இனி விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நாம் அனைவரும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை பகிர்ந்துக்கொள்ள வேண்டும். இங்கு நாம் அதிகாரம் செய்ய வந்திருக்கிறோம் என்று நிர்வாகிகள் நினைக்க கூடாது. அப்படி நினைத்தால் இந்த அமைப்பு அங்கேயே முடிந்து விடும். இங்கு இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய நாம் வந்திருக்கிறோம், என்று நினைத்தால் மட்டுமே இதை சரியான முறையில் வழி நடத்த முடியும். நான் தலைவன், நான் செயலாளர் என்ற அதிகார எண்ணம் இருக்க கூடாது. இங்கு யாருக்கும் கொம்பு இல்லை, இங்கு இருப்பவர்கள் அனைவரும் உறுப்பினர்கள் தான். அதில் அனுபவம் உள்ளவர்களையும், மூத்தவர்களையும் பதவியில் உட்கார வைத்திருக்கிறார்கள் என்று நினைத்து பணியாற்றினால் மட்டுமே இந்த அமைப்பை வெற்றிகரமாக வழி நடத்த முடியும்.
இது ஒரு ஆரம்பம், இதில் உங்களோட நோக்கம் என்ன?, எதிர்கால திட்டம் என்ன? என்பதை நீங்கள் கூடி விவாதிக்க வேண்டும். இதில் தொழிலாளிகளும், முதலாளிகளும் சேர்ந்து இருக்கிறார்கள். எனவே உங்களுடைய இந்த அமைப்பு வெற்றிகரமாக செயல்பட உங்களிடம் வெளிப்படைத்தன்மை வேண்டும். அதனால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும், அதில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு, அதை எப்படி சரி செய்யலாம், எப்படி செயல்படுத்தலாம் என்று பேசி முடிவு எடுக்க வேண்டும். இதை நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு செய்தால் மட்டுமே பலமான அமைப்பாக இதை வழிநடத்த முடியும். இங்கு முதலாளியை பாதுகாக்க வேண்டும், அதே சம்யம் தொழிலாளியையும் பாதுகாக்க வேண்டும், இந்த இரண்டையும் இந்த அமைப்பு செய்ய வேண்டும் என்பதால் இது மிகப்பெரிய விஷயம். பெப்ஸியை பொருத்தவரை நாங்கள் தொழிலாளர்கள், நாங்கள் முதலாலிகளிடம் சண்டைப்போட வேண்டும், அவர்கள் வெளியே மற்றொரு அமைப்பாக இருக்கிறார்கள். ஆனால், இங்கு இரண்டு பிரிவினரும் ஒரே அமைப்பில் இருக்கிறார்கள். அப்படியானால் உங்கள் பிரச்சனை என்ன? என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
இதை தொடங்கும் போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள், சிலர் வரவேற்றார்கள். அதனால் நீங்க பெப்ஸி உடன் சுமூகமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். முதலில் எடிட்டர் யூனியனுடன் உங்களுக்கு மோதல் ஏற்படும். காரணம், எடிட்டர் பணியை நீங்கள் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, அதனால் அங்கே உங்களுக்கு பிரச்சனை வரும். நீங்க எதையெல்லாம் பண்ண கூடாதோ அதை செய்யாமல் இருந்தால், பெப்ஸி உடன் நீங்கள் பயணிக்கலாம். கேமரா மேன் யூனியன் பணியையும், அவர்களுக்கு எதிராகவும் நீங்க செயல்பட கூடாது. இப்படி எதை எல்லாம் செய்யலாம், எதை எல்லாம் செய்ய கூடாது என்பதை பெப்ஸி நிர்வாகிகளுடன் சேர்ந்து பேசி முடிவு எடுதுக்கொள்ள வேண்டும்.
நீங்க ஒரு அமைப்பாக உருவாகியிருப்பது இயக்குநர்களுக்கு பலம் தரக்கூடிய விஷயம் தான். இடைத்தரகர்கள் மூலம் ஒரு பணி பெறப்பட்டு, அது வேறு ஒருவருக்கு போகும் போது, வேலை செய்பவருக்கும் லாபம் இல்லாமல் போகிறது. பணம் போடும் முதலாளிகளுக்கும் பெரிய தொகை செலவு ஆகிறது. ஆனால் உங்கள் அமைப்பு மூலம் பணிகள் வந்தால் நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு தரமான பணியோடு, நியாயமான தொகை நிர்ணயிக்கப்படும், அதேபோல் தொழிலாளிகளுக்கும் சரியான ஊதியம் கிடைக்கும். அதே சமயம், எப்போதும் உங்கள் பணியில் தரம் குறையவே கூடாது. தரமான வேலை இல்லை என்றால் இந்த துறையில் நெடுந்தூரம் உங்களால் பயணிக்க முடியாது. நிச்சயம் இந்த துறையில் போட்டி வரும், எப்படிப்பட்ட போட்டி வந்தாலும் பணி தரமாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து உங்களால் பயணிக்க முடியும்.
இங்கு இது சம்மந்தம் இல்லாத விஷயமாக இருந்தாலும், உதாரணத்திற்காக ஒன்று சொல்கிறேன், என் மனைவி எம்.எல்.ஏ-வாக இருக்கும் நகரி தொகுதி ஜவுளித்துறை சார்ந்த தொகுதியாகும். அங்கு 500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆன போது, திருப்பூரில் 100 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யப்பட்டது. தொழிலில் போட்டி ஏற்பட்ட போது நகரி ஜவுளித்துறை மிக மளிவான விலைக்கு கொடுத்தார்கள். உற்பத்தி அதிகம் இருந்ததால் அவர்கள், விலையை குறைத்துக்கொண்டே போனார்கள். ஒரு கட்டத்தில் விலை குறைப்பால் லாபம் இல்லை என்று தெரிந்ததும் தரம் குறைவான பொருளை விற்க தொடங்கினார்கள். ஆனால், திருப்பூரில் இதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி, அனைவரும் இந்த விலைக்கு தான் பொருள் வாங்க வேண்டும், இந்த விலைக்கு தான் விற்க வேண்டும் என்று ஒன்றாக முடிவு செய்தார்கள். அதனால், அவர்களுடைய பொருள் தரம் குறையாமல் இருந்தது. தொழில் மெதுவாக நடந்தாலும், அவர்களுக்கு என்று ஒரு தரம் உருவானது. இன்று திருப்பூரின் ஏற்றுமதி ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஆனால், நகரி ஜவுளித்துறை ஏற்றுமதி பூஜ்ஜியமாகி விட்டது. எனவே, எந்த நிலையிலும் தரத்தை நீங்கள் குறைத்து விடக்கூடாது. அதனால், உங்கள் அமைப்பு மூலம் ஒரு குறிப்பிட்ட சரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். நிலையான கட்டணட்தை உருவாக்க வேண்டும், அதை விட்டுவிட்டு தயாரிப்பாளருக்கு பாரம் கொடுத்தால் இந்த அமைப்பு காணாமல் போய்விடும்.
அனைவருடனும் சுமூகமாக பயணிக்க வேண்டும். பெப்ஸி தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் பேச்சு வார்த்தை மூலம் கொண்டு செல்வதற்கு அதுவே முதல் காரணம். இன்றைய காலக்கட்டத்தில் எதையும் அடக்குமுறையோடு செய்ய முடியாது, அப்படி செய்தால் போட்டி ஏற்படும், வேறு ஒரு அமைப்பு உருவாகும். அதனால், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இரு தரப்பு பிரச்சனைகளையும் நிர்வாகிகள் புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். உறூப்பினர்கள் அனைவரையும் பேச வைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டு பிறகு அதை எப்படி சரி செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி முடிவு எடுங்கள். ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமை அனைத்து உறுப்பினர்களும் கூடி பேசுங்கள். முதல் இரண்டு வருடங்களுக்கு இதை நீங்கள் செய்ய வேண்டும். காரணம், இது உங்களுக்கு தொடக்கம் அதனால் இதை நீங்கள் செய்தால் மட்டுமே உங்களது பிரச்சனை என்ன என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.
உங்கள் துறை அறிவுச்சார்ந்த துறை, அதை சரியான முறையில் செய்தால் மட்டுமே உங்களால் நிலைத்து நிற்க முடியும். இப்போது லண்டனிலும், மும்பையிலும் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் மேற்கொள்கிறார்கள். அதை பெருமையாகவும் நினைக்கிறார்கள். இந்த நிலையை நீங்கள் மாற்ற வேண்டும். அதற்கு உங்களுக்கு தெரிந்ததை உங்கள் உறுப்பினர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், சொல்லிக் கொடுப்பதால் நீங்களும் தொடர்ந்து கற்றுக்கொள்ள முடியும். இப்படி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால், லண்டன், மும்பையில் நடக்கும் பணிகள் இங்கு நடக்கும்.
நான் மூன்று விஷயங்களை மட்டும் வேண்டுகோளாக உங்களிடம் வைக்கிறேன். தயாரிப்பாளரை காப்பாற்ற வேண்டும், அவர் நன்றாக இருந்தால் பலர் நல்லபடியாக வாழ்வார்கள். அதேபோல், உங்கள் எல்லை எது, பெப்ஸி அமைப்பின் எல்லை எது என்று புரிந்து நடக்க வேண்டும், அவர்களுக்கு எதிரான எந்த செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது. உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கலந்துரையாட வேண்டும். இந்த மூன்று வேண்டுகோளையும் நீங்கள் நிறைவேற்றினால் உங்கள் அமைப்பு வெற்றிகரமாக இயங்கும். உங்களுக்கு பெப்ஸி எப்போதும் துணை நிற்கும் என்று கூறி உங்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறி விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் DIVA உறுப்பினர்களுக்கு காப்பீட்டு திட்டத்திற்கான சான்றிதழ், உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. மேலும், லைட் யூனியன் உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு Visual Effect பணியை கற்றுக்கொடுத்து, வேலையும் கொடுப்பதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் DIVA அமைப்பின் தலைவர் ரகுநாத் வர்மா, செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் கண்ணன், துணைத்தலைவர் ஜி.எஸ்.முத்து, துணைச் செயலாளர்கள், செல்வம், நந்தகுமார், கார்த்திக் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சேக் அப்துல்லா, சிவசங்கர், ஈஸ்டர், கிளமண்ட், கோபிநாத், மூர்த்தி, கார்த்திகேஷ், ராகவபெருமாள், விஜயபாபா, பாசில் முகமது, சந்திரகாந்த், குபேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.