
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பிகில். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி, தளபதி 64 என பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் படபிடிப்பு, குரோம்பேட்டை இந்திரா கார்டனில் தற்போது நடந்து வருகிறது.

இந்தப் படத்தை மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அவர், தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் கைதி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். தளபதி 64 படத்தில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். த்ரில்லர் படமாக உருவாகும் தளபதி 64 படத்தில் நடிகர் சாந்தனுவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் படத்தில் மாளவிகா மோகனன், ஆண்டனி வர்க்கீஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ விலகி இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் குடும்பத்துடன் நல்ல உறவில் இருக்கும் பிரிட்டோவுக்கும் படக் குழுவினருக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, படத் தயாரிப்பு பணியில் இருந்து அவர் விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.
