Wednesday, May 29
Shadow

நகைசுவை நடிகர் சந்திரபாபு மறைந்த நாள் இன்று

இன்னிக்கும் பலரால் ரசிக்கக் கூடிய நடிப்பாற்றல் நிறைந்திருந்த சந்திரபாபு தூத்துக்குடியில் கிறிஸ்டியன் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார்.

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட, அவர்களுடன் சென்ற சந்திரபாபு, கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 16-ம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒரு படத்தளத்தின் உள்ளே சென்று வாய்ப்புத் தேட அனுமதிக்கப்படாததால், தற்கொலைக்கும் முயன்றவர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்திரபாபு, நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சி கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்டு கூறினார், “உங்களுக்கு நான் சுட்டுக் கொண்டதுதான் தெரியும். என் காயத்தை உங்களால் உணர முடியாது. அதுபோலத்தான் என் துயரும்.”

1947-ம் ஆண்டு தன அமராவதி என்னும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த சந்திரபாபு விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார். 1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

சபாஷ் மீனா என்னும் வெற்றிப் படத்தில் இரு வேடம் தாங்கி நடித்த இவருக்கு அவற்றில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி இணையாக நடித்திருந்தார். அதன் கதாநாயகனான சிவாஜி கணேசனின் ஜோடியாக மாலினி நடித்திருந்தார். இதைப் போலவே புதையல் திரைப்படத்தில், கதாநாயகன் சிவாஜி கணேசனுக்கு ஈடாக, கதாநாயகி பத்மினியைக் காதலித்து ஏமாற்றமுறும் பாத்திரம் ஒன்றில் திறம்பட நடித்திருந்தார்.

தற்போது சென்னைத் தமிழ் எனவும், அன்றைய நாளில் மெட்றாஸ் பாஷை எனவும் வழங்கிய வட்டார வழக்கைச் சிறப்பாகக் கையாளுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார்.

தமது நடிப்பிற்காகவும், பாடல் திறமைக்காகவும் பிரத்தியேகமான ரசிகர் குழாமைக் கொண்டிருந்தார். இன்றளவும் அவரது பாடல்கள் வானொலிகளிலும், மேடைகளிலும் ஒலித்து வருகின்றன. இசைப் பேழைகளில் இவரது பாடல் தொகுப்புக்கள் விற்பனையாகின்றன. தலைமுறைதாண்டிய ரசிகர்கள் இவருக்கு உண்டு

Leave a Reply