Sunday, September 6
Shadow

முதல் படத்திலேயே டப்பிங் பேச ஆசைப்படும் விஜய் தேவரகொண்டா

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களுடன் பிரபல விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில்,‘பெள்ளி சூப்புலு’ படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். அர்ஜுன் ரெட்டி வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.

இயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்கமுடியவில்லை. பிறகு அவரிடம் இந்த கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு சற்று ஒய்வு கிடைத்தவுடன் இந்த கதையை முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்’ என்றார்.