‘திட்டம் போட்டு கட்டம் கட்றதுல ஏ.வி.எம் நிறுவனத்திற்கு இணையே இல்லை’ என்றொரு கருத்து கோடம்பாக்கத்தில் ஒலித்து வருகிறது. இத்தனைக்கும் ஏவிஎம் படம் தயாரிப்பதை நிறுத்தி பல வருஷங்கள் ஆகிவிட்டது. அப்படியிருந்தும் அவர்கள் பெற்ற அந்த நல்லப் பெயரை அவர்களாலேயே காப்பாற்ற முடியாத அளவுக்கு கதறவிட்டார்கள் அவர்களால் நியமிக்கப்பட்ட இயக்குனர்கள். விஷயம் இதுதான்…. ஏ.வி.எம் நிறுவனம் ஒரு படத்தை துவங்கினால், துவக்க விழாவிலேயே ரிலீஸ் தேதியையும் தைரியமாக வெளியிட்டு விடுவார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மட்டும் நன்மை அல்ல. இன்டஸ்ட்ரிக்கே நன்மை.
ஏ.வி.எம் படம் வருதுப்பா… ஒண்ணு, அது வர்றதுக்கு முன்னாடி நம்ம படத்தை வெளியிடுவோம். இல்லேன்னா வந்த பின்பு வெளியிடுவோம். என்று ஒரு திட்டத்தோடு செயல்படுவார்கள் மற்ற தயாரிப்பாளர்கள். இப்போது நிலைமை அப்படியல்ல. ஒரு படம் எப்போது திரைக்கு வரும் என்பதை தீர்மானிக்கிற சக்தி, தியேட்டர் மாஃபியாக்களிடம் போய்விட்டது. மற்ற மற்ற தொல்லைகளாலும் நினைத்த தேதியில் படத்தை வெளியிட முடியாமல் கையை பிசைகிறார்கள் சிறு பட தயாரிப்பாளர்கள்.
பெரிய படம் வருகிறதே… அதன் நடுவே போனால் சின்னாபின்னமாகிவிடுவோம் என்ற அச்சத்தில் ஒதுங்கிப் போகும் படங்கள், அந்த பெரிய படமும் அறிவித்த தேதியில் வராமல் போனால் என்னாவார்கள்? அப்படிதான் இன்று பல படங்களின் நிலைமை, கத்தி மேல் எலுமிச்சம் பழம் போல கதறிக் கொண்டிருக்கிறது.
அப்படி ஒரு சிரமத்தை யாருக்கும் தரக் கூடாது என்று நினைத்த சிவகார்த்தியேனும், அவரது புதுப்பட தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவும் கூடி ஒரு முடிவெடுத்திருக்கிறார்கள். வரப்போகும் ரெமோ மட்டுமல்ல, இனி அவர்கள் தயாரித்து வெளியிடவிருக்கும் எல்லா படங்களின் ரிலீஸ் தேதிகளையும் குறைத்நது ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டு விடுவது. சிறு படங்கள் அதற்கு முன்போ, பின்போ வந்துவிட்டு போகட்டும் என்பது இவர்களின் திட்டம்.
ரெமோ அக்டோபர் மாதம் 7 ந் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் ரிலீஸ் என்பதை திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்கள். இதனால் கரெக்டாக ரூட் போட்டு களமிறங்குகின்றன மற்ற படங்கள்.
நானும் இடிக்க மாட்டேன், நீயும் விழக் கூடாது என்கிற சிவகார்த்திகேயனின் நல்ல மனசுக்கு ஒரு ஆஹா… ஓஹோ… அற்புதம்!