
‘வடம்’ – மனிதன், மாடு, மரபு… மஞ்சுவிரட்டின் பின்னணியில் ஒரு கிராமிய கதை
நடிப்பு: விமல், நட்ராஜ் (நட்டி), சனஷ்கா ஸ்ரீ, முனீஷ்காந்த், நரேன், இந்துமதி, பாலசரவணன், மதுசூதன் ராவ், தீபா சங்கர்
இயக்கம்: கெந்தீரன்.வி
இசை: டி. இமான்
தயாரிப்பு: மசானி பிக்சர்ஸ் – ராஜசேகர்.ஆர்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டு என்ற பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘வடம்’. காளைகள், அவற்றை வளர்க்கும் மனிதர்கள், அவர்களுக்கிடையிலான மரபு, பெருமை, போட்டி மற்றும் பகைமை ஆகிய உணர்வுகளை கமர்ஷியல் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறது இந்த படம்.
ஊரில் மதிப்பும் மரியாதையும் பெற்ற மனிதராக இருக்கும் நரேன், அடிமாட்டுக்கு செல்லும் மாடுகளை காப்பாற்றி தனது கோசாலையில் வளர்க்கும் மனிதநேயமானவர். அவரது மகன் விமலும் அப்பாவைப் போலவே மாடுகளிடம் அன்பு கொண்டவராக வளர்கிறார். உடல் குறைபாடு கொண்ட ஒரு கன்று குட்டியை வீட்டில் வளர்த்து, அதை மஞ்சுவிரட்டு களத்தில் யாராலும் அடக்க முடியாத காளையாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
ஆனால் வாழ்க்கை அவருக்கு எளிதானதாக இருக்கவில்லை. ஒரு கொலை வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வரும் விமலை நீதிமன்ற வளாகத்திலேயே தாக்க முயலும் எதிரிகள், வீட்டுக்குள்ளே கூட அவரை கொல்லத் திட்டமிடும் மனிதர்கள் என பல திசைகளில் இருந்து பகைமைகள் எழுகிறது. இந்த நிலையில் அவரது வாழ்க்கையில் காதலாக வரும் சனஷ்கா ஸ்ரீ, சோகமாகி போன விமலின் மனதில் மீண்டும் மகிழ்ச்சியை விதைக்கிறார்.
அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நிலைக்கிறதா? காதலி கொடுக்கும் அதிர்ச்சி என்ன? பல பகைவர்களுக்கிடையில் சிக்கிய விமல் மீண்டும் தனது வாழ்க்கையை கட்டியெழுப்புகிறாரா? முக்கியமாக, மஞ்சுவிரட்டு களத்தில் அவரது காளை மீண்டும் சாதிக்கிறதா? என்பதற்கான பதில்களை கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லுகிறது ‘வடம்’.
ஜல்லிக்கட்டு அல்லது காளை அடக்கும் வீரத்தை மையமாகக் கொண்ட கதைகள் தமிழ்சினிமாவில் பல முறை வந்திருக்கின்றன. ஆனால் வடமாடு மஞ்சுவிரட்டு என்ற தனித்துவமான போட்டியை பின்னணியாக கொண்டு உருவானது இந்த படத்தின் சிறப்பு. அந்த மரபைச் சுற்றி உருவாகும் மனிதர்களின் பெருமை, போட்டி மனப்பான்மை, பகைமை ஆகியவற்றை இயக்குநர் கெந்தீரன் வி. கதையில் இணைக்க முயன்றுள்ளார்.
வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விமல், மாடுகளின் மீது அன்பு கொண்ட கிராமத்து இளைஞனாக இயல்பாக நடித்து இருக்கிறார். பொதுவாக காளைகளை அடக்கும் வீரராக ஹீரோக்கள் மாஸ் காட்டும் நிலையில், யாராலும் அடக்க முடியாத காளையின் உரிமையாளராக கெத்தாக நிற்பது விமலின் கதாபாத்திரத்திற்கு தனி அடையாளம் கொடுக்கிறது.
நாயகியாக நடித்துள்ள சனஷ்கா ஸ்ரீ அழகாக காட்சியளித்தாலும், அவருக்கான காட்சிகள் குறைவாக இருப்பது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. கதையில் ஒரு கட்டத்தில் அவர் காட்டும் மாற்றம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினாலும், அந்த கோணம் இன்னும் விரிவாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட மனிதராக நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் கதாபாத்திரம் கதைக்கு வலு சேர்க்கிறது. முனீஷ்காந்த் இந்த படத்தில் காமெடி எல்லையை தாண்டி முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பது கவனிக்கத்தக்கது. அவரது இயல்பான நடிப்பு கதையின் உணர்ச்சிகளை உறுதியாக தாங்குகிறது.
விமலின் தந்தையாக நடித்துள்ள நரேன், வழக்கம்போல் கொஞ்சம் ஓவரான நடிப்புடன் தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்துமதி, தீபா சங்கர், பாலசரவணன், மதுசூதன் ராவ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறை மற்றும் மனநிலையை தங்களது நடிப்பில் இயல்பாக பதிவு செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார் மஞ்சுவிரட்டு களத்தின் ஆற்றலை உணர்த்தும் வகையில் காட்சிகளை பதிவு செய்துள்ளார். ஆனால் பல லொக்கேஷன்கள் ஏற்கனவே பல படங்களில் பார்த்தவை என்பதால் ஒளிப்பதிவில் பெரிய புதுமை தெரியவில்லை. அதே சமயம் ஹீரோ, ஹீரோயினை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் டி. இமான் வழங்கிய பாடல்கள் அவரது பழைய படைப்புகளின் சாயலை நினைவூட்டினாலும், மனதில் நீங்காமல் நிற்கும் பாடலாக மாறவில்லை. பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு தேவையான அளவில் மட்டுமே இருக்கிறது.
மொத்தத்தில், மஞ்சுவிரட்டு மரபை பின்னணியாக வைத்து மனித உறவுகள், பெருமை, பகைமை மற்றும் காதலை கலந்து சொல்ல முயன்றிருக்கும் ஒரு கிராமிய கமர்ஷியல் படமாக ‘வடம்’ அமைந்துள்ளது.
