
ஜெ. ஜெயலலிதா முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். முறையே 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை “புரட்சித் தலைவி” எனவும் “அம்மா” எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.

அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.
மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி.[5] இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பைக் கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தீபக் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் தாய் சந்தியா இருந்த போது ஜெயக்குமார் குடும்பத்துடன் எல்லோரும் ஒன்றாகவே போயஸ் கார்டனில் இருந்தார்கள். தாய் காலமான பின்னர் ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறி விட்டார். ஜெயக்குமாரும் அவர் மனைவியும் காலமாகிவிட்டனர். அதன்பின் ஜெயலலிதாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்குமிடையில் தொடர்பு விட்டுப்போனது.
ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார். மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மக்கள் பலரும் ஜெயலலிதாவின் நடிப்பை வெகுவாக ரசித்தார்கள். இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு ‘கலைசெல்வி’ என்ற பட்டத்தை அளித்தார்கள். இவர் ம. கோ. இராமச்சந்திரன் உடன் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது. தன் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
1981ல் அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தன் கன்னி பேச்சுகளால் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியே கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா (முன்னாள் தமிழக முதல்வர் கா. ந. அண்ணாதுரை) அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னால் மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அமர்ந்திருந்தார்.[8] எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ம. கோ. இராமச்சந்திரனின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக ரசிகர்களால் ஜெயலலிதா அறியப்பட்டார். அப்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. எனினும் தம் முயற்சியால் இரு அணிகளையும் மீண்டும் இணைத்து முடக்கப்பட்ட கட்சி சின்னத்தை காப்பாற்றினார். ஜானகி இராமச்சந்திரனுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல புரச்சிகரமான திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். 1996 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் எதிர்க்கட்சிகள் இவர் மீது பல வழக்குகளை தொடர்ந்தன.
இவர் மேல் வழக்குகள் இருந்தாலும் 2001, மே அன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் நான்கு மாதம் கழித்து பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கில் நீக்கப்பட்டதை தொடர்ந்து 2002, மார்ச்சு மாதம் முதல்வராக பதவியேற்றார். 2002இல் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட ஏதுவாக தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து பதவி விலகினார். 2002, பிப்ரவரி 21ல் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் போட்டியிட்டார்.அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, செயலலிதாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும், கடன் ரூ.2.04 கோடி. 2006ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் சொத்து மதிப்பு ரூ.24.7 கோடியாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியாக உயர்ந்தது. ஏப்பிரல் 25, 2016 அன்று வேட்புமனு அளித்தார். அத்தேர்தலில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மேலும் அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.
2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 75 நாட்களுக்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாகி உயிரிழந்தார்.
