
எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார். சஞ்சாரம் என்னும் இவருடைய படைப்புக்கு 2018 சாகித்திய அகதெமி விருது இவருக்கு வழங்கப்பெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம், மங்கையர்க்கரசி என்போராவர். இவரது தந்தைவழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர். தாய்வழித் தாத்தா சைவ சமயப் பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார். தற்சமயம் மனைவி சந்திரபிரபா, குழந்தைகள் ஹரி பிரசாத், ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இவரது முதல் கதையான “பழைய தண்டவாளம்” கணையாழியில் வெளியாகியிருக்கிறது. 1984இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன (விரிவான பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது). ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன. இவரது சிறுகதைகள் ஆங்கிலம், இடாய்ச்சு, பிரான்சியம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.”அட்சரம்” என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்.
“இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்” என்று ஜெயமோகனும், “ஜெயகாந்தன் போல… எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்” என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர். புத்தாயிரத்தின் இலக்கியம் – இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் ந. முருகேச பாண்டியன் “எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது” என்று கருத்துரைத்துள்ளார்.

சஞ்சாரம் என்ற நாவலை எழுதியமைக்காக 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணின் நாதசுர இசைக்கலைஞர்களின் வாழ்வியல், நாதசுரக் கலையின் சிறப்புகள், நாதசுரக் கலைஞர்களின் சாதியச் சூழல் ஆகியவற்றை சஞ்சாரம் நாவல் விவரிக்கிறது.
பணியாற்றிய திரைப்படங்கள்: சண்டைக்கோழி, பாகுபலி, ஆல்பம், பாபா, தாம்தூம், பீமா, உன்னாலே உன்னாலே, கர்ண மோட்சம், மோதி விளையாடு, சிக்கு புக்கு, அவன் இவன், யுவன் யுவதி
