
தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் இயக்குநர் அட்லீ. தளபதி 63 என்ற தற்காலிக டைட்டிலுடன் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். படம் தொடங்கும் போதே தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும்போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான சர்கார், மெர்சல் ஆகிய இரண்டு படங்களுமே தமிழகத்தில் அதிகம் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு மட்டுமே ரூ.70 கோடிக்கும் மேல் பங்கு கிடைத்ததாகவும், அதனால் இந்தப் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்ற கடும்போட்டி நிலவி வருவதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தளபதி 63 படத்தைக் கைப்பற்ற ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுஒருபுறமிருக்க, இந்தப் படத்தின் இந்தி உரிமையை, பெரும் தொகை கொடுத்து ‘கோல்ட்மைன் டெலிஃபிலிம்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
